Published : 11 Apr 2023 07:00 AM
Last Updated : 11 Apr 2023 07:00 AM

10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட புளியந்தோப்பு நவீன இறைச்சிக்கூட திட்டம்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தில் ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன். உடன் மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) எஸ்.காளிமுத்து, திரு.வி.க.நகர் மண்டல அலுவலர் முருகன் உள்ளிட்டோர். படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு, வழக்குகள், அரசியல் போன்ற பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட புளியந்தோப்பு நவீன இறைச்சிக் கூடம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் இறைச்சிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. சென்னை மாநகரப் பகுதியில் இறைச்சிக்காக கால்நடைகளை இந்த கூடங்களில் மட்டுமே வெட்ட வேண்டும். வேறு எங்கு வெட்டினாலும் அது விதிமீறலாகும்.

இதில், புளியந்தோப்பு இறைச்சிக் கூடம் பழமையானது. வாரநாட்களில் 2 ஆயிரம் ஆடுகள்,100 மாடுகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள், 200-க்கும் மேற்பட்ட மாடுகளும் வெட்டப்படுகின்றன. மற்ற இறைச்சிக் கூடங்களில் இவ்வளவு எண்ணிக்கையில் வெட்டப்படுவதில்லை. மேலும், இங்கு மட்டும்தான் மாடுகளை வெட்டும் வசதிகள் உள்ளன.

இருந்தபோதிலும், இந்த இறைச்சிக்கூடம் பல ஆண்டுகளாக சுகாதாரக்கேடுடன் காணப்படுகிறது. திடமற்றும் திரவக் கழிவு மேலாண்மை இங்கு மோசமாக உள்ளது.

அதனால் 9.4 ஏக்கர் பரப்புள்ள இந்த இறைச்சிக் கூடத்தில் ரூ.43கோடியில் மணிக்கு 250 ஆடுகள்,60 மாடுகளை வெட்ட முடியும்வகையில் நவீன இறைச்சிக் கூடம்கட்ட கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு நடவடிக்கைஎடுத்தது. டெண்டர் விட்டு, தனியார் மூலம் பணிகளும் தொடங்கி, முதல் திட்டப் பணிகள் நிறைவடைந்து, 2-வது திட்டப் பணிகள் தொடங்க இருந்தது.

வியாபாரிகள் வழக்கு: இந்நிலையில், இறைச்சிக்கூடம் நவீனமயமாக்கப்பட்டால், 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என, இத்திட்டத்தை எதிர்த்து இறைச்சி வியாபாரிகள் நீதிமன்றம் சென்றனர்.

பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனமும், வழக்குகள் காரணமாக பணிகளை முடிக்க முடியாததால், இப்பணியை தொடர விரும்பவில்லை, முடித்த பணிகளுக்கான தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சென்றது.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சியும், தனியார் நிறுவனமும் கலந்துபேசி, இழப்பீட்டு தொகை வழங்கி,மீண்டும் டெண்டர் விட்டு, பணிகளை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இவ்வாறாக, வழக்குகள், இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு, அரசியல் காரணம் போன்றவற்றால் 2-ம் திட்டப்பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது.

தற்போது மீண்டும் திமுக ஆட்சிநடைபெறும் நிலையில், இத் திட்டத்தை செயல்படுத்துமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன் நேற்று புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தில் ஆய்வுசெய்தார். அப்போது அங்கு விதிகளை மீறி கொட்டப்பட்டிருந்த கட்டுமானக் கழிவுகளை அகற்றுமாறும், கால்நடைகளை அறுக்கும்கூடத்தை பார்வையிட்டு அப்பகுதியை தூய்மையாகப் பராமரிக்குமாறும் அங்கு உருவாகும் கழிவுகளை முறையாக வெளியேற்றுமாறும் அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "கிடப்பில் போடப்பட்ட நவீன இறைச்சிக்கூட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு எதிராக இருந்த வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. விரைவில் பணிகளைத் தொடங்கி, இப்பகுதியில் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்படும்" என்றனர்.

இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) எஸ்.காளிமுத்து, திரு.வி.க.நகர் மண்டல அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x