Published : 11 Apr 2023 06:18 AM
Last Updated : 11 Apr 2023 06:18 AM

போக்சோ நிலுவை வழக்குகள் - உத்தர பிரதேசம் முதலிடம்

புதுடெல்லி: நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சட்டத்தின் கீழ் ஏராளமான வழக்குகள் பதியப்பட்ட போதிலும் விசாரணை இன்றி நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இந்தப் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இம்மாநிலத்தில் மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் போடப்பட்ட 67,200 வழக்குகள் முழுமையான விசாரணையின்றி முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் பதியப்பட்ட போக்சோ வழக்குகளில் ஏறக்குறைய 28 சதவீத வழக்குகள் உத்தர பிரதேச மாநிலத்தில் நிலுவையில் இருப்பது சட்ட அமைச்சகத்தின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 33,072 நிலுவை போக்சோ வழக்குகளுடன் மகாராஷ்டிரா 2-ம் இடத்திலும், 22,164 வழக்குகளுடன் மேற்கு வங்கம் 3-ம் இடத்திலும் உள்ளன.

இதைத் தொடர்ந்து, ஒடிசா (11,940), மத்திய பிரதேசம் (10,066), தமிழகம் (9,753) உள்ளிட்ட மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இருப்பதாக சட்ட அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு சிறப்பு விரைவு நீதிமன்றம் உருவாக்கப்பட்ட போதிலும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2016-ல் 90,205 ஆக இருந்த போக்சோ வழக்குகள் 2023 ஜனவரி நிலவரப்படி 170 சதவீதம் அதிகரித்து 2,43,237-ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x