Published : 01 Sep 2017 09:15 AM
Last Updated : 01 Sep 2017 09:15 AM

அசல் ஓட்டுநர் உரிமம் குறித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் வேண்டுகோள்

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்:

வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) முதல் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதம், 3 மாத சிறை தண்டனை ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நடைமுறை சாத்தியங்களையும், எதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட அபத்தமான ஆணையாகும்.

ஓட்டுநர்கள் பணி நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அப்போது அசல் ஓட்டுநர் உரிமம் தொலைவதற்கோ, மழையில் நனைந்து வீணாவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நடந்தால் புதிய உரிமம் வாங்கும் வரை ஒரு மாதமோ, இரு மாதங்களோ பணி செய்ய முடியாது. இதனால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படும். மேலும் ஓட்டுநர்கள் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்புக்காக அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதால் ஊதியத்துக்காக வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமத்தை கையில் வைத்திருப்பது சாத்தியமற்றது. இந்த உத்தரவைக் காரணம் காட்டி காவல்துறையினர் அத்து மீறும்போது தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர்ஜி.ராமகிருஷ்ணன்:

வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும். வாகனம் ஓட்டி பிழைக்கும் தொழிலாளர்கள், வேலைக்கு செல்பவர்கள், சொந்தமாக தொழில் செய்பவர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் என அனைத்து பகுதியினரையும் அச்சுறுத்தி வாழ்வுரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:

தீவிரமாக யாரையாவது சந்தேகப்பட்டால் அதற்கான முகாந்திரம் இருந்தால் அசல் உரிமத்தை கொண்டு வந்து காட்டச் சொல்லலாம். அதைவிடுத்து நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை செயல்படுத்த நினைப்பது ஏற்புடையதல்ல. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு மக்களின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். சாலைப் போக்குவரத்தில் லஞ்சத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் இந்த உத்தரவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x