Published : 04 Apr 2023 07:14 PM
Last Updated : 04 Apr 2023 07:14 PM

தமிழகத்தில் புதிய நிலக்கரி திட்டங்களை நிறுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம்: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: “தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி திட்டங்களை விரிவுபடுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்தாவிட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதனை கைவிட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், சூழலியல் அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் காரணமாகவும், கோரிக்கையின் அடிப்படையிலும், டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இச்சூழலில், டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது. கடந்த நவம்பர் 3 அன்று, நிலக்கரித் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருப்பதை ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார். இதில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 12 மாநிலங்களில், 141 நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை ஆகிய நிலக்கரித் திட்டங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வடசேரி நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், மைக்கேல்பட்டி திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே, கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது விரிவுப்படுத்தப்பட உள்ள 3வது சுரங்கத்திற்காக, 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிய நிலக்கரி திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தி விடும். தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும். ஒன்றிய அரசின் புதிய நிலக்கரி திட்டங்களை தடுக்கப்படாவிட்டால், நெற்களஞ்சியமாக விளங்கும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.

காலநிலை மாற்றம் இப்புவியில் வாழும் எல்லா உயிரினங்கள், சூழல் அமைவுகளின் இருப்புக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளதை ஐ.பி.சி.சி.யின் சமீபத்திய தொகுப்பு அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. இதனை புரிந்துக்கொண்டு, தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி திட்டங்களை விரிவுபடுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்தாவிட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, புதிய நிலக்கரி திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x