Last Updated : 03 Apr, 2023 11:55 AM

2  

Published : 03 Apr 2023 11:55 AM
Last Updated : 03 Apr 2023 11:55 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்துவதில் பின் தங்கிய புதுச்சேரி: காலக்கெடு முடியும் நிலையில் கிடப்பில் உள்ள திட்டங்கள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வாகியும் பணிகளே நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள குபேர் மார்க்கெட்

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் புதுச்சேரி நாட்டிலேயே பின்தங்கிய நிலையில் உள்ளது. தேர்வாகி ஆறு ஆண்டுகளாகியும் முக்கியத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டே உள்ள சூழலில் வரும் ஜூனுடன் இதற்கான காலக்கெடு முடிகிறது

நாடு முழுவதும் இத்திட்ட செயல்பாடான தரவரிசையிலும் புதுச்சேரி செயல்திறன் திருப்தியாக இல்லை என்றும், மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு நகரங்கள் தேர்வாகியுள்ளன. பல நகரங்கள் இத்திட்டத்தில் மேம்பட்டுள்ளன. இத்திட்டத்தில் புதுச்சேரியும் தேர்வாகி ஆறு ஆண்டுகளாகியுள்ளது. புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் (பி.எஸ்.சி.டி.எல்.) வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்தவில்லை.

அதே நேரத்தில் புதுச்சேரியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற மாநிலங்களின் நகரங்கள் இலக்குகளை நிறைவு செய்யும் நோக்கில் நெருங்கி வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவன வாரியத்தின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 31 திட்டங்களில், பெரும்பாலான திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாதது தெரியவந்தது.

குறிப்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் இணையதளத்தின்படி, "கடற்கரைச் சாலையில் பொதுக் கழிவறை மேம்படுத்துல், கடற்கரைச் சாலையில் கல்பெஞ்சுகள் அமைத்தல், எல்இடி விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட சில திட்டங்கள் மட்டுமே முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல திட்டங்கள் இன்னும் டெண்டர் கட்டத்திலேயே உள்ளன " என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி காலக்கெடு வரும் ஜூனுடன் முடிவடைய உள்ள சூழலில் திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மிகவும் பின் தங்கியிருப்பதும் உறுதியாகியுள்ளது. திட்ட அமலாக்கம், நிதி செலவீடு ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்கள் தேசிய அளவில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அதில் புதுச்சேரியின் செயல்திறன் திருப்திகரமாக இல்லை எனபதை வெளிப்படையாக மத்திய உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் விசாரித்தபோது, "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முக்கியமாக பழைய சிறை வளாகத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி, 4.5 ஏக்கரில் ஸ்மார்ட் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், கூடுதல் வணிக இடத்துடன் மேம்படுத்தப்பட்ட குபேர் மார்க்கெட், புதிய பஸ் நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங், 10 கிமீ தொலைவுக்கு சைக்கிள் பாதை, தாவரவியல் பூங்கா மேம்பாடு, நகர்புற வனப்பகுதிக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா, போக்குவரத்து மேலாண்மை ஆகிய திட்டங்களில் ஒன்றைக் கூட ஸ்மார்ட் சிட்டியில் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

ஆரம்பித்த பல திட்டங்களும் பாதியிலேயே நிற்கின்றன. ஸ்மார்ட் சிட்டிக்கு தலைமை வகிப்பது தலைமைச் செயலர் தான்." என்று குறிப்பிடுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக தனது அதிருப்தியை முதல்வர் ரங்கசாமியும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்ட கோப்புகள் எனக்கு வருவதில்லை. தலைமைச்செயலர் தான் அப்பொறுப்பு வகிக்கிறார். அவரும், செயலர்களும் தான் திட்டங்களை செயல்படுகின்றனர். ரூ.1200 கோடி திட்டங்கள் இக்காலத்தில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது ரூ. 250 கோடி மதிப்பிலான பணிகளே நடந்து வருகிறது" என்று முதல்வர் கூறினார்.

இது குறித்து உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக புதுச்சேரிக்கு 786.65 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்பிசிசி நிறுவனம் இப்பணிக்கு பெரும் பகுதி நிதியை தந்துள்ளது. திட்ட முன்மொழிவுகள் இயற்றுவதில் உள்ள வேறுபாடுகள் திட்ட செயலாக்கத்துக்கு இடையூராக உள்ளன. அத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குறைவான ஊழியர்களே உள்ளனர். பெரும்பான அதிகாரிகள் இதர துறைகளுக்கு மாற்றமும் தாமதத்துக்கு ஓர் காரணம். புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இணை தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, மேலாளர்கள், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் துணை மேலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளுக்கான அதிகாரிகள் - அனைவரும் பிரதிநிதித்துவத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி எந்த யோசனையும் இல்லாததால் இது தாமதத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

எங்களுக்கு நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன, மேலும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. விரைவில் திட்டப்பணிகளை முடிக்க முயற்சி எடுத்துள்ளோம்" என அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x