Published : 15 Mar 2023 04:26 AM
Last Updated : 15 Mar 2023 04:26 AM

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் போதைக்கு அடிமையாக்கி மதமாற்றம் - தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் குற்றச்சாட்டு

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நேற்று ஆய்வு செய்த தேசிய குழந்தைகள் நல ஆணையக் குழுவினர்.

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக போதை மருந்துகளை கொடுத்து, அவர்களை போதையிலேயே வைத்திருந்து மத மாற்றம் செய்து வந்துள்ளனர் என்று, அங்கு விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது அன்பு ஜோதி ஆசிரமம். இங்கு தங்கிருந்த சிலர் மாயமானதாக வந்த புகார்களின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், ஆசிரமத்தில் இருந்த ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர் என்பதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரியவந்தது. ஆசிரமத்தில் இருந்து15 பேர் காணாமல் போயிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரமபணியாளர்கள் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நேற்று விசாரணை நடத்தினர். ஆசிரமத்தில் உள்ள பல்வேறு அறைகளுக்கும் சென்று பார்வையிட்டனர். ஆசிரமத்தில் தாக்குதலுக்கு ஆளாகி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்வையிட்டு, அவர்களிடமும் குழுவினர் விசாரித்தனர்.

2 அறைகளுக்கு சீல்: பின்னர், குழுவினர் உத்தரவின்பேரில், ஆசிரம நிர்வாகியின் அறை, மனநலம் குன்றியோர் தங்கவைக்கப்பட்டிருந்த அறை ஆகிய 2 அறைகளையும் வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் குழு தலைவர் ஆனந்த் கூறியதாவது: ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா, நாகாலந்து உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில ஆசிரமங்களுக்கும் இந்த ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் 60பேரை தங்கவைத்து பராமரிக்கமட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், 140-க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு போதைப் பொருட்களை கொடுத்து வந்துள்ளனர்.

இரவு நேரங்களில் ஜெபம் செய்து மத மாற்றம் செய்யும் வேலையும் இங்கு நடந்துள்ளது. இங்கு சேர்க்கப்பட்டிருந்த குழந்தையின் தாய் இதுபற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். உடல்நிலை சரியில்லாதவர்களை ‘டார்க் ரூம்’ எனப்படும் இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று, ‘உடல்நிலை சரியாகிவிடும்’ என்று கூறி மதம் மாற்றும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இங்கு அனுமதிக்கப்பட்ட சிறியவர்கள், பெரியவர்கள் யாரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. நல்ல மனநலத்துடன் இருந்தவர்கள்தான். தொடர்ச்சியாக போதை மருந்துகளை கொடுத்து அவர்களை அடிமையாக்கி வைத்திருந்துள்ளனர். அவர்களை எப்போதும் போதையிலேயே வைத்திருந்து, மதம் மாற்றம் செய்யும் இடமாக அன்பு ஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது.

இதற்காக அதிக அளவில் பணம் கைமாறியதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. மனநலம்பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் மாத்திரைகள் இங்கு கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மாயமான 15 பேர் குறித்து விசாரணை நடந்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி நேற்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x