Published : 14 Mar 2023 07:33 PM
Last Updated : 14 Mar 2023 07:33 PM

விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் குறித்து விசாரணை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

கோப்புப்படம்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு ஷபீருல்லா என்ற தனது 70 வயது மாமாவை அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.

சலீம்கான் தனது நண்பர் ஹலிதீன் மூலம், மாமா ஷபீருல்லாவைச் சந்தித்து அவரது நலம் விசாரித்து தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹலிதீன், அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சென்ற போது ஷபீருல்லா அங்கு இல்லை. அவர் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இருப்பதாக ஆசிரமத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பெங்களூரு சென்று பார்த்தபோது, அங்கும் ஷபீருல்லா இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஷபீருல்லாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஹலிதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில், காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட ஷபீருல்லா, அங்கு மரணமடைந்து இருக்கலாம் எனவும், அவரது அங்க அடையாளங்களுடன் ஒத்துப்போகும் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உடலை அடையாளம் காட்ட அமெரிக்கவில் உள்ள உறவினரை தமிழ்நாடு அழைத்து வருவது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் என்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி காவல் துறை தரப்பில், "ஷபீருல்லாவின் மனைவி மற்றும் மகள் சத்தியமங்கலத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களது இருப்பிடம் விரைவில் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு 2 மாத கால அவகாசம் தேவை. மேலும், அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து 15 பேர் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x