Published : 15 Mar 2023 04:20 AM
Last Updated : 15 Mar 2023 04:20 AM

மண் வளம் காத்து, விவசாயிகள் வருவாயை பெருக்க அங்கக வேளாண்மை கொள்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, துறை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-ஐ (TamilNadu Organic Farming Policy) முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-2022-ம் ஆண்டுக்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், ‘அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய, இயற்கை வேளாண் விளைபொருட்களின் தேவை அதிகரித்துள்ளதோடு விழிப்புணர்வும் அவசியமாகி உள்ளது.

இவற்றை கருத்தில்கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்பு கவனத்துடன் செயல்படுத்துவதற்காக, வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப் பிரிவு உருவாக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதன் முதல்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற்காக வேளாண்மை – உழவர்நலத் துறை செயலர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் மூலம் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல் திட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழக விவசாயிகள் இடையே அதிகரித்தல், நிலங்களில் ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கையின் நோக்கம்: அங்கக வேளாண்மை கொள்கை மூலம் மண் வளம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல் மற்றும் நிலைத்திருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்குதல், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அங்கக வேளாண்மை நடைமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும்.

அங்கக சான்றளிப்பு முறைகள், நச்சுத்தன்மை பகுப்பாய்வு நெறிமுறைகளை வலுப்படுத்துதல், பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது பண்ணைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருட்கள் ஊக்குவிக்கப்படும்.

மேலும், சந்தை ஆலோசனைகள், சான்றிதழ் ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன் ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x