Published : 06 Mar 2023 07:02 PM
Last Updated : 06 Mar 2023 07:02 PM

தமிழக பாஜகவில் இருந்து விலகல் ஏன்? - அண்ணாமலை மீது புகார்களை அடுக்கிய திலீப் கண்ணன்

சென்னை: "பாஜக தலைவராக முருகன் இருக்கும்போது மாற்றுக் கட்சியில் இருந்து மிக முக்கியத் தலைவர்களை எல்லாம் கொண்டுவந்து கட்சியில் இணைத்தார். அண்ணாமலை வந்த பிறகு அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?" என்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள தகவலில், "கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? தான் பதவிக்கு வரும்போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்? ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்.

தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார். (அவர் மீது இதுவரை எந்தப் பெண்ணும் புகார் அளிக்கவில்லை) அடுத்து பேராசிரியர் சீனிவாசன், மாநிலப் பொதுச் செயலாளர் மொத்தம் நான்கு பொதுச் செயலாளர்கள் அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு, தன்னைவிட அறிவாளியான பேராசிரியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை. தன்னைவிட அறிவாளியான பேராசிரியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை.

அடுத்து பொன்.பாலகணபதி மாநில பொதுச் செயலாளரான அவர்மீது சின்ன பிரச்சினை வருகிறது. அப்போது அக்கா, சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர்மீது தவறு இல்லை என்று பேட்டியளிக்கிறேன் என்றார். அவரை தடுத்து பொன்.பால கணபதியை அசிங்கப்படுத்தினார்.

அடுத்தது நைனார் அண்ணன், அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையின் உள்ளே வைத்துக்கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் போலீஸ் தோரணையில் அண்ணாமலை ஏளனமாக பேசுவார். இவர் வந்துதான் எல்லாம் கிழிச்ச மாதிரி, எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மையை வைத்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கிக் கொண்டாடியிருப்பான் என்று பேசுவார்.

பாஜக தொண்டனை கைது செய்துவிட்டனர் என்று செய்தி அனுப்பினால், அவன் ஏன் இப்படி பதிவு போட்டான் என்று திருப்பி கேள்வி கேட்பது, அவர்களுக்கு எந்த சட்ட உதவியும் செய்வதும் இல்லை. சட்ட உதவி செய்கிறவர்களை ஏன் செய்கிறாய் என்று மிரட்டுவார். இவர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு யாரையாவது தூத்த வேண்டும் என்றால், மொத்தமாக சேர்ந்து திட்டுவார்கள். அவர் யார், என்ன செய்தார், அவருடைய உழைப்பு என்ன, இப்படியெல்லாம் பேசாதவர், திடீர்னு இப்படி பேச காரணம் என்னவென்றெல்லாம் இரண்டு பக்கமும் யோசிக்கமாட்டார்கள்.

பாஜக தலைவராக அண்ணன் முருகன் இருக்கும்போது மாற்று கட்சியில் இருந்து மிக முக்கியத் தலைவர்களை எல்லாம் கொண்டுவந்து கட்சியில் இணைத்தார். அண்ணாமலை வந்தபிறகு அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பார்ப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரெட்டியை கூடவே வைத்து சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை.

நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்குத் தெரியும். வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பர்களுக்கு அவர் புனிதராகத்தான் தெரிவார். இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டிகள் எத்தனை பேரை வெளியே அனுப்பப் போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எப்படியும் என்னை திட்டுவார்கள். ஆனால், கட்சியின் மீது தீவிர பற்று கொண்ட ஒருவன் போகிறேன் என்றால், இவர்கள் எந்தளவுக்கு கேவலமாக இருக்கிறார்கள் என்று கொஞ்சமாவது யோசித்து பாருங்கள். இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு 100% உழைத்திருக்கிறேன்.

என்னை எப்படியும் திட்டி தீர்ப்பீர்கள். அதற்கு முன்னால் ஒரு சித்தாந்தவாதியே இப்படி போகிறானே, அப்போ தவறு எங்கே நடக்குதுனு ஒருமுறை யோசித்துவிட்டு திட்டுங்கள். இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் நன்றி, கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x