Published : 17 Feb 2023 12:27 PM
Last Updated : 17 Feb 2023 12:27 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்றுமா அமைச்சர் பட்டாளம்? 

ஈரோடு கிழக்கு வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் பிரச்சாரத்தில் எம்பி கனிமொழி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கிடைக்கும் பெருவெற்றி, இரண்டாண்டு கால திமுக ஆட்சிக்கான சான்றிதழாக அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால், அவரது தீவிரத்தை அமைச்சர்கள் உணர்ந்து செயல்படுகின்றனரா என்ற கேள்வி திமுக வட்டாரத்திலேயே எழுப்பப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7 தேதி முதல்வராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். இன்றோடு சரியாக 652 நாட்களைக் கடக்கிறது திமுக ஆட்சி. இந்த நிலையில், திமுக ஆட்சி குறித்த வாக்காளர்களின் மனநிலையை ‘ஸ்கேன்’ செய்யும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ளது.

மையப்புள்ளியாய் முதல்வர்: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் எதிர்பாராத மறைவும், உடனடியாக அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல், தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது போன்றவை மிக வேகமாக நடந்து முடிந்த நிகழ்வுகள். திருமகன் ஈவெரா மறைவு தகவல் கிடைத்ததும், அமைச்சர்கள் சகிதமாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்ற குரல்களை மறுதலித்து, வேட்பாளராக இளங்கோவனே போட்டியிட வேண்டும் என விரும்பி அறிவித்தவர் ஸ்டாலின். அதோடு, சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று இதனை வலியுறுத்தி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தின் மையப்புள்ளியாக இருந்து, தானே முன்னின்று களத்தை வடிவமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அடுத்ததாய், 10 அமைச்சர்கள், முன்னணி திமுக பொறுப்பாளர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விரிவடைந்து, துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதைத் தவிர, முழுக்க, முழுக்க திமுகவே தேர்தல் களத்தை ஆக்கிரமித்துள்ளது. ‘இந்த இடைத்தேர்தலில் உண்மையான வேட்பாளர் ஸ்டாலின் தான்’ என ஈவிகேஎஸ் இளங்கோவனே அறிவித்தது இன்னும் ஒரு ஹைலைட்.

ஆட்சிக்கு நற்சான்றிதழ்: தனது இரண்டாண்டு கால ஆட்சிக்கு கிடைக்கும் நற்சான்றிதழாகவும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், உட்கட்சி பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைக்கு வகையிலும் இந்த தேர்தல் முடிவு அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக, தனிக்கவனம் செலுத்தி, ஈரோடு கிழக்கில் பெரு வெற்றி பெற நினைக்கிறார். அமைச்சர்கள் பட்டாளத்துடன், தனது மருமகன் சபரீசனையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது இதற்கு முக்கிய உதாரணம்.

கடந்த பொதுத்தேர்தலின்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் சேர்த்து, மொத்தம் இரண்டு இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், 33 வார்டுகளை மட்டுமே அடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில், 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதோடு, கனிமொழி, உதயநிதி போன்றவர்களும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

முதல்வரின் ஈடுபாடு, அமைச்சர்களின் தேர்தல் பணி குறித்து, ஈரோட்டில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மூத்த திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாக இதனை முதல்வர் கருதவில்லை. ஆட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அவதூறுகளுக்கு தேர்தல் வெற்றி மூலம் பதில் அளிக்க விரும்புகிறார். இதற்காக தேர்தல் பணியில் அவர் காட்டும் தீவிரம் அசாத்தியமானது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் அனைவரின் பணிகளும், தனிக்குழுக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கின்றனர் என்ற புள்ளி விபரம் தினமும் அனுப்பப்படுகிறது.

போனில் விசாரிப்பு: இதையெல்லாம் விட, இரவு 8 மணியில் இருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மட்டுமல்லாது, கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் நேரடியாக பேசி விபரம் கேட்கிறார். இன்று எங்கு பிரச்சாரம் செய்தீர்கள், எத்தனை வாக்கு வித்தியாத்தில் வெற்றி கிடைக்கும், மக்கள் மன நிலை என்ன என தனித்தனியே கேட்டுத் தெரிந்து கொண்டு வருகிறார்’ என்றார்.

‘அமைச்சர்களின் செயல்பாடு முதல்வருக்கு திருப்தி அளித்துள்ளதா’ என்று அந்த பிரமுகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது
குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே மைக்ரோ அளவில் வாக்காளர்களைச் சந்தித்து பேசி தேர்தல் பணியாற்றுகின்றனர். மற்றவர்கள் சில மணி நேரம் வாக்கு சேகரித்து, புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுத்து விட்டு செல்கின்றனர். உதாரணமாக, தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளில் அனைத்து வாக்காளர்களையும் நேரில் ஒருமுறை சந்தித்து பேசி விட்டார். ஜவுளித்தொழில் சார்ந்த அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் உள்ளிட்ட குழுக்களை சந்தித்து பேசியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் பயணித்து தீவிர பிரச்சாரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஒதுக்கப்பட்ட 22 வாக்குச்சாவடிகளில் வசிக்கும் 20 ஆயிரம் பேரை, வீடு தோறும் சென்று நேரில் பார்த்து வாக்கு சேகரித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் பணியிலேயே அவர் முத்திரை பதித்து விட்டார். தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் வசிக்கும் கள்ளுக்கடை மேடு பகுதியில் அமைச்சர் சாமிநாதன், வாக்காளர் பட்டியலோடு, மைக்ரோ லெவலில் வேலை பார்க்கிறார். மாவட்ட அமைச்சரான முத்துசாமி மற்றும் எ.வ.வேலு, நேரு ஆகியோர் பிரச்சாரத்திற்கு வருபவர்களை ஒருங்கிணைப்பதில், ‘தேவைகளை’ நிறைவேற்றுவதிலும் தீவிரமாக உள்ளனர். சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் நாசர், மஸ்தான் பணி சிறப்பாக உள்ளது.

வாக்கு சேகரிப்பில் அமைச்சர் முத்துசாமி

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரன், சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் அவ்வப்போது மட்டுமே தொகுதியில் தென்படுகின்றனர். இதனால், முதல்வர் எதிர்பார்க்கும் பெருவெற்றி கிடைப்பது கேள்விக்குறிதான்’ என்று சொல்லி முடித்தார்.

இரண்டாண்டு கால திமுக ஆட்சிக்கு கிடைக்கும் சான்றிதழாக ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு அமையும் என்பதால், இனிவரும் நாட்களில், தேர்தல் பிரச்சாரங்களும், வியூகங்களும் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x