Published : 16 Feb 2023 07:27 AM
Last Updated : 16 Feb 2023 07:27 AM

தீவுத்திடலில் மெட்ரோ ரயில் நிறுவன அரங்குக்கு 29,400 பார்வையாளர்கள் வருகை

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் அகில இந்தியப் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிறுவன அரங்கு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த அரங்குக்கு இதுவரை 29,400 பேர் வருகை தந்துள்ளனர். தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், 47-வது அகில இந்தியப் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது.

இப்பொருட்காட்சியில் ஓர் அரங்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கு இடம் பெற்றுள்ளது. இதன் முகப்பு பகுதி நந்தத்தின் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடம் போல அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு வாயில் மெட்ரோ ரயிலில் ஏறி உள்ளே செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரங்கத்தைப் பார்வையிட்டு பொதுமக்கள் வெளியே வரும்போது, சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவம் வழியாக வெளியேறும் வகையில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் எப்படி இயங்குகிறதோ அதுபோல மாதிரி வடிவம் இயக்கப்படுகிறது.

அரங்கின் உள்ளே சென்னை மெட்ரோ ரயில் பற்றிய பல்வேறு புகைப்படங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவமைப்பு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-1, கட்டம் -2ன் வரைபடம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அரங்கில் சென்னை மெட்ரோ ரயில் பற்றிய தகவல்கள், செய்திகள், தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த கண்காட்சியில் திருமயிலை மெட்ரோ ரயில் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, மெட்ரோ ரயில்நிறுவன அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்குக்கு இதுவரை 29,400 பேர் வருகை தந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் கூறியதாவது:

இந்த அரங்கை வார நாள்களில் தினசரி சராசரியாக 500 பேரும், வார இறுதியில் சராசரியாக 1,200 பேரும் பார்வையிடுகிறார்கள். இதுவரை மொத்தம் 29,400 பேர் பார்வையிட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில் நிறுவன அரங்கில் பயண அட்டை விற்பனையும் நடைபெறுகிறது. பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் நபர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதுவரை 623 பயண அட்டைகள் விற்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x