Published : 15 Feb 2023 04:05 AM
Last Updated : 15 Feb 2023 04:05 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: கூடுதலாக 1,144 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவுக்காக கூடுதலாக ஒப்படைக்கப்பட்ட 1,144 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்கள் சரிபார்த்தனர்.

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவுக்காக கூடுதலாக 1,144 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 882 இயந்திரங்கள் 30 சதவீதம் கூடுதல் எண்ணிக்கையில் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டன.

இவை கடந்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக ஈரோடு ரயில்வே காலனி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 1,144 இயந்திரங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: இடைத் தேர்தலுக்கு மொத்தம் 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே, 286 இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,144 இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

தேர்தல் பணியில் தேவைப்பட்டால் கூடுதல் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 103 புகார்கள் வந்துள்ளன. தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 5,681 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x