Published : 15 Feb 2023 04:42 AM
Last Updated : 15 Feb 2023 04:42 AM

தமிழ்நாடு மின்வாகன கொள்கை-2023: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023’ஐ முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஹுண்டாய், டி.ஐ க்ளீன் மொபிலிடி, ராயல் என்ஃபீல்டு, ஓலா எலெக்ட்ரிக், ஸியோன் சார்ஜிங், எச்.எல் மேண்டோ, ஏதெர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை: தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023’-ஐ சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த கொள்கை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.

மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையை தக்கவைத்து, மேம்படுத்தவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப மின்வாகன உற்பத்தி துறையில் உள்ள சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளும் வகையிலும், மாறுபட்ட கொள்கை அணுகுமுறையும், தற்போதைய கொள்கையில் சில மாற்றங்களும் தேவைப்படுகின்றன.

எனவே, மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரிக்கும் நோக்கத்திலும், விநியோகம், தேவைகள், பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்தும் வகையிலும் ‘தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023’ என்ற திருத்திய கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்வில் தலைமைச்செயலர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, ஹுண்டாய், டி.ஐ க்ளீன் மொபிலிடி, ராயல் என்ஃபீல்டு, ஓலா எலெக்ட்ரிக், ஸியோன் சார்ஜிங், எச்.எல்மேண்டோ, ஏதெர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கொள்கை, வெளியிடப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.

ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள்: மின்வாகன உற்பத்தி துறையில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

பொது போக்குவரத்து திட்டங்களை மின்மயமாக்குதல், ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காக பிரத்யேகமாக மின்வாகன நகரங்கள் உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரி திரும்ப வழங்குதல், மூலதன மானியம், விற்றுமுதல் அடிப்படையிலான மானியம், சிறப்பு மேம்பட்ட மின்கல வேதியியல் சலுகை என பல்வேறு வகைப்பட்ட முதலீட்டு சலுகைகளைப் பெற வாய்ப்புகள் உள்ளன.

மின்னேற்ற நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், பொது மின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்தல், மின் ஆட்டோகளுக்கான பதிவு மேற்கொள்ளுதலில் இருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் E-2W மற்றும் E-4W வாகனங்களுக்கு வர்த்தக அனுமதி பத்திரங்களை வழங்குதல், மின் வாகன மின்னேற்றுதலுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மூலதன மானியம் வழங்குதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

திறன் மேம்பாடு, புதிய கட்டிடங்கள், ஏற்கெனவே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு நகரியங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட மின்சார வாகன மின்னேற்று உள்கட்டமைப்புக்கான மாதிரி கட்டிட விதிகள் 2016-க்கு ஏற்ப தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

மின் வாகனச் சூழலமைப்பை மேம்படுத்தும் வகையில், மின் வாகன தொழிற்பூங்காக்கள் அமைத்தல் மற்றும்விற்பனையாளர் சூழலமைப்பு உருவாக்குதல், பிரத்யேகமாக மின்வாகன இணையதளம் உருவாக்குதல் மற்றும் வழிகாட்டி நிறுவனத்தில் மின்வாகன ஆதரவு சேவை பிரிவு உருவாக்குதல், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தலைமைச் செயலர் தலைமையில், முக்கிய துறைகளின் செயலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மின் வாகன வழிகாட்டுதல் குழுவை மாற்றி அமைத்து,இக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x