Published : 08 Feb 2023 07:17 AM
Last Updated : 08 Feb 2023 07:17 AM

சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவை: டிஜிபி சைலேந்திர பாபு கருத்து

சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க அதிக அளவிலான கணினி பொறியாளர்கள் தேவை என டிஜிபி சி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சைபர் குற்றங்கள் தடுப்பு தொடர்பான தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதை தொடக்கி வைத்து டிஜிபி சைலேந்திர பாபு பேசியதாவது: நமது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகமாகிவிட்டன. அவற்றை தடுக்க போதுமான கணினி பொறியாளர்கள் நம்மிடம் இல்லை. முன்பெல்லாம் வீட்டுக்கு வந்து கதவை உடைத்துதான் திருடினார்கள்.

இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகிறார்கள். அறிவாற்றல் மிக்க, நன்கு பயிற்சி பெற்றவர்கள்தான் இத்தகைய குற்றங்களை செய்கின்றனர்.

கணினி படிக்க வேண்டும்: எதிர்காலத்தில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் அதிகம் தேவை. அந்த தேவையை மாணவர்கள்தான் நிரப்ப வேண்டும். அதனால், கணினி தொடர்புடைய பாடங்களை மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

யாராவது லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னால் அது ஆபத்து என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அறிமுகமில்லாத யாராவது வங்கிக் கணக்கு கேட்கிறார்கள் என்றால் திருடுவதற்குதான் என்று அர்த்தம். அவர்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும்.

`காவல் உதவி’ செயலி: தமிழகத்தில் 'காவல் உதவி' என்ற செயலியை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதில்அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் 66 விதமான வசதிகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x