Published : 04 Feb 2023 03:49 PM
Last Updated : 04 Feb 2023 03:49 PM

போக்குவரத்து விதிமீறல்: நிலுவை வழக்குகளில் 2 நாட்களில் சென்னையில் ரூ.61 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில் கடந்த 2 நாட்களில் ரூ.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை பெருநகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலான விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை.

எனவே, சென்னை பெருநகரத்தில் 10 அழைப்பு மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விதிமீறி அபராதம் செலுத்தாதவர்களை, தொலைபேசியின் மூலம் கடந்த 2022ம் ஆண்டு விதி மீறல் செய்து அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியில் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் 27.01.2023 அன்று 166 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 5,757 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.17,42,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த தொடர் நடவடிக்கைகளை பின்பற்றி சிறப்பு வாகன தணிக்கையின் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்க கடந்த 2 மற்றும் 3ம் தேதி 166 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் 3 இடங்களை தேர்வு செய்து, விதி மீறுபவர்களை பணமில்லா பரிவர்தனை மூலம் அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் 5,336 வாகன ஓட்டிகள் தங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளான 21,175 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.61,70,420 அபாரதம் வசூலிக்கப்பட்டது” என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x