Published : 02 Feb 2023 04:52 AM
Last Updated : 02 Feb 2023 04:52 AM
சென்னை: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தவணைத் தொகை பெறுவதற்காக, வங்கி சேமிப்புக் கணக்குகளை தொடங்க இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி சார்பில், தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அது ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் மட்டும்தான் பணம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆதார் எண் இணைக்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளை தொடங்க இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி முன்வந்துள்ளது.
இந்த சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அந்தக் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டு விடப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தமிழகம் முழுவதும் உள்ள 3.17 லட்சம் விவசாயிகள் இதுவரை தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம் வரும் 10 நாட்களுக் குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT