Published : 31 Jan 2023 04:25 AM
Last Updated : 31 Jan 2023 04:25 AM
வேலூர்: வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்கி வைக்க வேலூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தரவுள்ளார். இதையொட்டி, காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலையில் முன்னேற்பாடு பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார்.
வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார்.
இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் நாளை பகல் 12 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வரவுள்ளார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அங்கிருந்து கார் மூலம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல்வர் செல்லவுள்ளார். அங்கு, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி வகுப்பறை கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பங்கேற்கவுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் காட்பாடியில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர் தங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு மாலை 5 மணியளவில் விஐடி பல்கலையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார். பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோல் தொழிலதிபர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் குழுவினரை சந்திக்கவுள்ளார்.
(இந்த நிகழ்ச்சி தனியார் ஹோட்டலுக்கும் மாறலாம் என கூறப்படுகிறது). தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் -ஒழுங்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், வடக்கு மண்டல ஐஜி டாக்டர் கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), டாக்டர் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), டாக்டர் பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), டாக்டர் தீபா சத்யன் (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளில் வேலூர் மாநகராட்சியில் ஏதாவது ஒரு இடத்தில் முதல்வர் ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது. மேலும், பிப்ரவரி 2-ம் தேதி திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் திருமண நாள் என்பதால் அவரது வீட்டுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வாய்ப் புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய துறைகளின் செயலாளர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), முருகேஷ் (திருவண் ணாமலை), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை), அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்) உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அளித்துள்ள தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆய்வுக்குப் பிறகு மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு நாளை மறுதினம் மாலை அவர்ரயில் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது, துணை மேயர் சுனில்குமார், முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT