Published : 29 Jan 2023 07:45 AM
Last Updated : 29 Jan 2023 07:45 AM

கட்டிடம் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரம் - அதிகாரிகள் மீது வழக்கு பதியக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா சாலையில் இருந்த பழமையான கட்டிடத்தை இடித்தபோது சாலையோரம் சரிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி பத்மபிரியா என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனை கண்டித்தும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இடிக்கப்பட்ட கட்டிடம் முன்பாக நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.படம்: ம.பிரபு

சென்னை: சென்னையில் கட்டிடம் விழுந்து பெண் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதியக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை, அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சுரங்கப் பாதை அருகில் இருந்த பழமையான கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அவ்வழியே நேற்று முன்தினம் சென்ற மதுரைமாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்மபிரியா உட்பட 2 பேர் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி விழுந்தது. இதில் பத்மபிரியா உயிரிழந்த நிலையில், திருச்சிமாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பொக்லைன் இயந்திர உரிமையாளர் பாலாஜி, ஓட்டுநர் குணசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிய கோரி, விபத்து நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “விதிப்படி கட்டிடம் இடிக்கப்படுகிறதா? என உயர் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இந்த அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்ததற்கு மாநகராட்சிதான் பொறுப்பு. மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்கு பதிய வேண்டும். ஆயிரம் விளக்கு, துறைமுகம், எழும்பூர், புரசைவாக்கம், ஜார்ஜ் டவுன், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பழைய கட்டிடங்கள் உள்ளன. இத்தகைய கட்டிடங்களை இடித்து புதுப்பிக்கும் பணியை மாநகராட்சி முறையாக ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x