Published : 26 Jan 2023 04:33 AM
Last Updated : 26 Jan 2023 04:33 AM
வந்தவாசி: வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்ததை கண்டித்து, குழந்தையின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம் மூசா (40). இவரது மனைவி ஜமீலா (27). இப்ராகிம் மூசா பூக்கடை தொழிலாளி. இவர்களது 6 மாத குழந்தை முகமது ரசூல். குழந்தைக்கு கடந்த 23-ம் தேதி சளி, காய்ச்சல் மற்றும் சிறுநீர் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று அதிகாலை உயிரிழந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உற வினர்கள் மருத்துவமனை நிர் வாகத்தை கண்டித்து, வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் இறந்த குழந்தையின் உடலுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவலறிந்த வந்தவாசி தெற்கு காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமரசம் ஏற்படாத நிலையில் செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பாபு, டிஎஸ்பிக்கள் வெங்கடேசன் (செய்யாறு), ரவிச்சந்திரன் (ஆரணி) உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித மேம்படுத்தப்பட்ட வசதியும் இல்லாத வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்பவர்கள் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். வந்தவாசி அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதுடன் குழந்தை இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையேற்று வந்தவாசி அரசு மருத்துவமனையில் பணி மருத்துவராக இருந்த திவ்யா மற்றும் இரண்டு செவிலியர்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், குழந்தை இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.
இதனையேற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு செல்பவர்களை செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT