Published : 21 Jan 2023 12:02 AM
Last Updated : 21 Jan 2023 12:02 AM

ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட இரு பட்டாசு ஆலைகளுக்கு சீல்

சிவகாசி: சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து நேற்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி பாதுகாப்பு நாளாக கடைபிடித்து சுய ஆய்வு மேற்கொண்டனர். அதேநேரம் வருவாய்த்துறை நடத்திய ஆய்வில் ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட இரு பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மாநில அரசு மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழிமுறைகள் வெளியிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை அருகே கனஞ்சாம்பட்டி பகுதிகளில் இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து டான்பாமா, டாப்மா, டிப்மா ஆகிய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று பாதுகாப்பு நாளாக கடைபிடித்து அனைத்து ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தி சுய ஆய்வு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலைகளில் சுய ஆய்வு மேற்கொண்டனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இதுபோன்று விபத்துக்கள் ஏற்படாத வகையில் பட்டாசு ஆலைகளில் உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் சிவகாசி ஆர்டிஓ விஸ்வநாதன் அறிவுறுத்தலில் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், விஏஓ உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

ராஜபாளையம் அருகே சம்மந்தபுரம் பகுதியில் உள்ள சிவசக்தி பயர் ஒர்க்ஸ் மற்றும் கொத்தங்குளம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி பயர் ஒர்க்ஸ் ஆகியவற்றில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தபோது உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரு பட்டாசு ஆலைகளுக்கும் சீல் வைத்தனர்.

ஆய்வு குறித்து சிவகாசி ஆர்டிஓ விஸ்வநாதன் கூறுகையில், ‘‘பட்டாசு உற்பத்தி ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குறுவட்ட அளவில் வருவாய் துறை சார்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x