Published : 20 Jan 2023 06:13 AM
Last Updated : 20 Jan 2023 06:13 AM
சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியான தேர்தல்கள் முடிந்து பல்வேறு பொறுப்புகளுக்கு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து,20-க்கும் மேற்பட்ட அணிகள், குழுக்களின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திமுகவில் ஏற்கெனவே இருந்த 21 அணிகளுடன் சேர்த்து புதிதாக அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டுஅணி உருவாக்கப்பட்டு அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதில், விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு முதல் செயலாளராக மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன்நியமிக்கப்பட்டார். துணை செயலாளர்களாக பைந்தமிழ் பாரி, கவுதம்சிகாமணி, பார்த்திபன் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு,பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேர்காணலைத் தொடங்கி வைத்தனர். திமுகவின் அமைப்புரீதியிலான 73 மாவட்டங்களில் நேற்று காலை 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மாலை 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என 370 பேர் பங்கேற்றனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர்கூறும்போது, ‘‘பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றவர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் என பலரும் தற்போது திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியில் இணைந்துள்ளனர். அவர்களில் பலர் தற்போதுநடைபெறும் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிக்கு, தங்கள் மாவட்டம் சார்பில் பங்கேற்றனர்.
28 மாவட்டங்களின் அமைப்பாளர்கள் பதவிக்கு காலை மற்றும் மாலையில் நேர்காணல் நடைபெற்றது. நாளை (இன்று) மீதமுள்ள மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதையடுத்து, பகுதி, வட்டஅமைப்பாளர்கள் பதவிக்கு நேர்காணல் நடத்தப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT