Published : 15 Jan 2023 04:16 PM
Last Updated : 15 Jan 2023 04:16 PM

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் பலூனில் பயணம் செய்து பார்வையிட்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

பொள்ளாச்சி: நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் புகைப்படம் பொறிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை பலூனில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று(15.01.2023) பயணம் செய்தார்.

முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று(ஜன.14) பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர், ''தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னிலை மாநிலமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். அதன் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு முதல்வர் நடத்திய செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே மாமல்லபுரம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கோயில்கள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைபகுதிகள் ஆகியவறறைக்காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகின்றது.

வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழா, இம்முறை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், வியட்நாம், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ராட்சத வெப்பக்காற்று பலூன்கள் கொண்டு வரப்பட்டு இங்கே பறக்க விடப்பட்டுள்ளன. பலூன் திருவிழா நடைபெறும் திடலில் குறிப்பிட்ட உயரத்தில் வானில் பலூன்கள் நிலை நிறுத்தப்படும். சுமார் 100 அடி உயரத்தில் வானில் இருந்தபடி பொள்ளாச்சி நகரின் அழகை ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பலூன் திருவிழாவை காண கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகை தந்துள்ளார்கள்.

இளைய தலைமுறையினரை கவரும் நோக்கில், சாகச சுற்றுலாத்தலங்களை உருவாக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 7.31 ஏக்கர் பரப்பளவில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 12.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.91 கோடி மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை மன்னவனூரில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசை கடற்கரையில் 6.72 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் சாகச சுற்றுலா மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் மேற்கொண்டு வரும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும், வணிகர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் பெருகும் நிலை உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பலூன் திருவிழாவில் இடம் பெற்ற பலூன்களின் செயல்பாடுகளை பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர், பலூன்களை இயக்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பைலட்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x