Published : 10 Jan 2023 07:38 AM
Last Updated : 10 Jan 2023 07:38 AM

தமிழக அரசின் புத்தொழில் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் நேற்று நடைபெற்ற உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்க வாழ் தமிழக முதலீட்டாளர்கள் நிதி வழங்குவதற்கான விருப்பக் கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினர். உடன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர்.

சென்னை: புத்தொழில் தொடர்பான தமிழகஅரசின் முன்னோடி செயல்திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னையில் உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் இணையதள தொடக்க விழாநடைபெற்றது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழகத்தைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய, அமெரிக்க வாழ் தமிழக முதலீட்டாளர்கள் ரூ.16.50 கோடி முதலீடுகளுக்கான விருப்பக் கடிதத்தை, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் அளித்தனர்.

மாநாட்டில், இணையதளத்தை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்களில் நல்ல சூழலை உருவாக்க ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் புத்தொழில் முதலீடுகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கிடைத்துள்ளது.

2021-ம் ஆண்டைவிட இது 70 சதவீதம் அதிகம்ஆகும். இது தமிழகத்தின் மீதுமுதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. புத்தொழில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது.

புத்தொழில்களை உருவாக்கவும், வளர்க்கவும் பல்வேறு முன்னோடி செயல்திட்டங்களை அரசுவகுத்துள்ளது. அனைத்து விதமானதொழில்களும் வளர வேண்டும்.அது அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும். அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்கு பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்குநர் சிவராஜா ராமநாதன், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை தலைவர் பாலா சாமிநாதன், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் கணபதி முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x