Published : 09 Jan 2023 04:15 AM
Last Updated : 09 Jan 2023 04:15 AM

விவசாயிகளுக்கு ஒரு பக்கம் பாதிப்பு, மறு பக்கம் லாபம் - 5 கிலோ தக்காளி ரூ.50-க்கு கூவி கூவி விற்பனை

பிரதிநிதித்துவப் படம்

திண்டுக்கல்: தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக இறங்கும் நிலையில், வெங்காய விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், அய்யலூர், வடமதுரை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகள் அதிகப் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. திண்டுக்கல்லில் வெங்காயத்துக்காகப் பெரிய மார்க்கெட் செயல்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து வெங்காயம் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதோடு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இதேபோல் தக்காளிக்காக பகுதி வாரியாக மார்க்கெட்டுகள் ஏற்படுத்தப்பட்டு கொள்முதல் செய்து பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு தக்காளி ஒரு கிலோ ரூ.100-ஐ தொட்டபோது வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30-ஐ கடக்கவில்லை. தக்காளி ஏறுமுகத்திலும், வெங்காயம் அதேநிலையிலும் காணப்பட்டது.

தற்போது இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. தக்காளிச் செடிக்கு ஏற்ற காலநிலை, மழை இல்லாததால் பாதிப்பு இல்லை, என்பதால் வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனையானது. இது படிப்படியாக குறைந்து தற்போது வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது.

வேடசந்தூர் வாரச்சந்தையில் ஐந்து கிலோ தக்காளி ரூ.50-க்கு நேற்று கூவிக்கூவி விற்கப்பட்டது. தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வெங்காய விலை ஒரு வாரமாக ஏறுமுகத்தில் உள்ளது. வரத்துக் குறைவு காரணமாக வெங்காய விலை அதிகரித்துள்ளது.

வெளி மார்க்கெட்டில் சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.85 முதல் விற்பனையாகிறது. பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது. வெங்காய வரத்துத் தொடர்ந்து குறையும் நிலையில் ஒரு கிலோ ரூ.100-ஐ எட்டவும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x