Published : 09 Jan 2023 04:54 AM
Last Updated : 09 Jan 2023 04:54 AM

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு இன்றுமுதல் விநியோகம்

முதல்வன் மு.க.ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2008-ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்பட்டது. ரூ.100-ல் தொடங்கிய ரொக்கப்பரிசு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.

2021-ம் ஆண்டு ரூ.2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. ஆனால், 2022-ல் ரொக்கம் வழங்கப்படவில்லை. கரும்புடன் சேர்த்து 21 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பொருட்களின் தரத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பின்னர், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பத்தினர் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து, கரும்பு கொள்முதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிகருப்பன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் கடந்த 3-ம் தேதி முதல் 8-ம் தேதி (நேற்று) வரை வழங்கப்படும் எனவும், முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜன.9-ம் தேதி தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரியது என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் தொடங்கிவைத்த பின்னர், அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் தொடங்க வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி, ரேஷன் கடைகளுக்கு வரும் 13-ம் தேதி பணி நாள் என்றும், அதற்குப் பதில் வரும் 27-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அத்துடன், பொங்கல் தொகுப்புக்கான பொருட்கள் தரமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் கூடுவதைத் தடுக்க தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் ஒரே கட்டிட வளாகத்தில் செயல்பட்டால், கூடுதல் மேஜை நாற்காலிகளை ஏற்பாடு செய்து, கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவைக்கேற்ப காவல் துறையினரின் உதவியைப் பெற வேண்டும். தொழில்நுட்ப இடையூறு உள்ளிட்ட காரணங்களால் கைரேகை சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள இயலாத நிலையில், அதற்கான பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்கலாம் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாலை வரை 94 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.

கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. இன்று காலை 9.15 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விநியோகிக்கிறார்.

இதையடுத்து, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்குகிறது. வரும் 12-ம் தேதி வரை டோக்கன் வரிசைப்படியும், 13-ம் தேதி விடுபட்டவர்களுக்கும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x