Published : 01 Jan 2023 11:12 AM
Last Updated : 01 Jan 2023 11:12 AM
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டப்பணி நேற்று தொடங்கியது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறியதாவது: மழை நீரில் கழிவு, குப்பையை அகற்றி, தூய்மையான முறையில் நிலத்துக்குள் கொண்டு சேர்க்க ஜெர்மனி நாட்டில் பின்பற்றப்படும் ‘இன்ஃபில்டரேஷன் கேலரி’ என்ற தொழில்நுட்பம் ரேஸ்கோர்ஸ் மாதிரிச் சாலை திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த தொழில் நுட்பத்தின்படி, தரையில் இருந்து குறைந்த பட்சம் 9 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதில் 6 அடி உயரத்துக்கு எக்கோ பிளாஸ்டிக் கட்டமைப்பு உருவாக்கி, அதன் மீது புல்தரை அமைக்கப்படும். இந்த இடத்தில் விழும் மழை நீரில், கழிவுகள் வடிந்து நிலத்துக்குள் சென்று கலக்க இத்திட்டம் உதவும்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் 25 இடங்களில் தலா 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ‘இன்ஃபில்டேரேஷன் கேலரி’ தொழில்நுட்ப கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் உட்புகும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறு மழை பெய்தாலும் சிறிய கொள்ளளவு கொண்ட 25 கட்டமைப்புகளின் மூலம் நிலத்துக்குள் மழைநீர் சென்று விடுவது, இத்திட்டத்தின் சிறப்பம்சம். பெரு மழை பெய்தால், இந்த 25 கட்டமைப்புகளிலும் பொருத்தப்பட்டுள்ள வழித்தடங்கள் மூலம் கால்வாயாக தன்னிச்சையாக மாறி, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கட்டமைப்புக்கு சென்று வடிந்து நிலத்துக்குள் தண்ணீர் சென்று விடும். விரைவில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT