Published : 31 Dec 2022 07:40 AM
Last Updated : 31 Dec 2022 07:40 AM

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவு: பொங்கலுக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதி

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளு வர் சிலையில் பராமரிப்பு பணி முடிவடைந்ததை தொடர்ந்து இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த சாரம் அகற்றப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் வரும் பொங்கல் பண்டிகைக்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதனருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கடல் நடுவேயுள்ள இவ்விரு பாறைகளுக்கும் படகில் பயணிப்பது முக்கிய பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

கடல் உப்புக்காற்றால் திருவள்ளுவர் சிலை சேதமடையாமல் இருக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. அதன்பின் கரோனா பரவல் காரணமாக இப்பணி நடைபெறவில்லை. தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையின் மீது ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

நவம்பர் மாதம் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொடர் மழை மற்றும் சூறைக்காற்றால் பணி தாமதமானது. சிலையில் கடல் உப்புப்படிமம் அகற்றப்பட்டு, கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி ஆகிய கலவையும், சிமென்ட் கலவையும் பூசப்பட்டன. முடிவில் ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்றது. இப்பணி நேற்று முன்தினம் நிறைவுற்றது. தற்போது 145 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டு இருந்த சாரத்தை பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் சாரம் அகற்றப்பட்டு விடும். எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x