Published : 31 Dec 2022 06:49 AM
Last Updated : 31 Dec 2022 06:49 AM

கருணாநிதி நினைவாக ரூ.81 கோடியில் பேனா சின்னம்: சென்னையில் ஜன. 31-ல் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம்

சென்னை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துத் துறை பங்களிப்பை போற்றும் வகையில் தமிழக அரசுசார்பில் அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, 2 ஆயிரத்து 263 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவுச் சின்ன பீடம், 2 ஆயிரத்து 73 சதுர மீட்டர் பரப்பில் நடைபால அமைப்பு, 1856 சதுரமீட்டர் பரப்பில் பின்னல் நடைபாலம், 1610 சதுர மீட்டர் பரப்பில் கடற்கரைக்கு மேல் பாதசாரிகள் பாதை,748 சதுர மீட்டர் பரப்பில் நினைவிடத்தில் இருந்து பாலம் வரையிலான நடைபாதை என மொத்தம் 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது. மேலும், கருணாநிதியின் பொன் மொழிகள் நினைவு சின்ன பீடத்தில் பதிக்கப்பட உள்ளன.

பீடத்தை சுற்றி உள்ள பகுதிகள்சிக்குக் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளன. இப்பரப்பு முழுவதும் கடல் பரப்பினுள் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது.

அதற்கான அனுமதி கோரி பொதுப்பணித்துறை, மாவட்ட கடலோரமண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது. அதைபரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னர்தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம். அதன்படி தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வரும் ஜன.31-ம் தேதி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள்கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்கலாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இத்திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்யன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனுதாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த அமர்வு, மத்திய, மாநில அரசுத்துறைகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வரும் பிப். 2-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x