Published : 30 Dec 2022 04:46 AM
Last Updated : 30 Dec 2022 04:46 AM
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வேட்டி, சேலைகளை உரிய காலத்தில் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தைப் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை நெய்யும் பணிகள் முடங்கியுள்ளதாக நெசவாளர்களும், கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்களும் புகார் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் பணிக்கான உத்தரவு, அக்டோபரில்தான் வழங்கப்பட்டதாகவும், ஆகஸ்ட்டில் வழங்க வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில் நைந்துபோன நூல் அறுந்து, துண்டு துண்டாக விழுவதால் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர். இதனால் 90 சதவீத நெசவாளர்கள், தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால்தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
2023-ம் ஆண்டு பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காவிடில், நெசவாளர்களையும், பொதுமக்களையும் திரட்டி அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும். இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT