Published : 29 Dec 2022 04:26 AM
Last Updated : 29 Dec 2022 04:26 AM

மக்களவை தேர்தல் வெற்றிக்கு கனவு காண்கிறது பாஜக - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தியாகி கக்கன் சிலையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்தியா ஆகியோர் திறந்து வைத்தனர். உடன், தமிழக எஸ்.சி. பிரிவு தலைவர்எம்.பி.ரஞ்சன்குமார் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழகத்தில் யார் தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம் என்றே தெரியாத நிலையில், 2024 மக்களவை தேர்தல் பற்றி பாஜக கனவு காண்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை போரூர் லட்சுமி நகரில் மாரத்தான் ஓட்டம், நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் அமைச்சர் கக்கன் சிலையை திறந்துவைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: சுதந்திரப் போராட்ட தியாகியும், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான பி.கக்கன், எளிமை, நேர்மையில் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

நாட்டுக்காக மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என 3 தலைவர்களை இழந்த இயக்கம் காங்கிரஸ். பாஜகவை சேர்ந்த யாராவது நாட்டின் விடுதலைக்காக ஒரு மணி நேரமாவது சிறையில் இருந்திருக்கிறார்களா என்றால் இல்லை. ஆனால், எங்களை பார்த்து சுயநலம், ஊழல் கட்சி என பாஜக தலைவர் நட்டா கூறுகிறார். தமிழகத்தில் யார் தலைமையிலான கூட்டணியில் பாஜக இருக்கிறது என்றே தெரியாத நிலையில், 2024 மக்களவை தேர்தல் பற்றி கனவு காண்கிறார். 5 கோடிக்கும் மேற்பட்டோர் பேசும் 5 செம்மொழிகளைவிட 21 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சம்ஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசிய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், தேசிய எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் கே.ஜெயக்குமார், எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, கக்கன் மகள் கஸ்தூரி கக்கன் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x