Published : 29 Dec 2022 05:32 AM
Last Updated : 29 Dec 2022 05:32 AM
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை என்ஐஏ போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த அக்.23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. காரை ஓட்டி வந்த கோட்டைமேடு ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனப் பொருட்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்புடைய தடயங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இவ்வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரை என்ஐஏ போலீஸார் காவலில் எடுத்து கடந்த 20-ம் தேதி முதல் விசாரணை நடத்தினர். அவர்களை கோவைக்கு அழைத்து வந்து சமீபத்தில் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக என்ஐஏ தரப்பில் கூறப்படுவதாவது: கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் முக்கிய நபராக முபின் செயல்பட்டார். அவருடன் இணைந்து கைது செய்யப்பட்ட மற்றவர்கள் சதித் திட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளிலும், வனப்பகுதியின் உட்பகுதிகளிலும் நடைபெற்ற சதித் திட்ட ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டங்கள், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்டஉமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. குறிப்பாக, உயிரிழந்த ஜமேஷா முபின், முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாராகி அதைச் செயல்படுத்த சதி ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு என்ஐஏ தரப்பில் கூறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT