Last Updated : 29 Dec, 2022 01:57 AM

 

Published : 29 Dec 2022 01:57 AM
Last Updated : 29 Dec 2022 01:57 AM

புதுச்சேரி | அதிகரித்துள்ள ரெஸ்டோ பார் அனுமதி - 'பார்டி' சத்தத்தால் குடியிருப்புவாசிகள் தவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களில் இருந்து எழும் அதிக சத்தத்தால் குடியிருப்புவாசிகள் தவிக்கும் நிலையும் அதற்கான போராட்டங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம், விதவிதமான 400க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுள்ள பார்கள் உள்ளன. தற்போது அடுத்தக்கட்டமாக உணவு சாப்பிடும் ரெஸ்டாரண்டுகள் அனைத்திலும் பார் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளன. அதன்படி, ரெஸ்டாரண்டுகளில் மது அருந்தும் வசதி கொண்டவையாக பல மாற்றப்பட்டு அவை ரெஸ்டோ பார் என்று அழைக்கப்படுகின்றன. கீழ்தளத்தில் ரெஸ்டாரண்டும் மேல்தளத்தில் பார் வைக்கப்படுகின்றன. அத்துடன் பார்ட்டி கொண்டாடும் வகையில் அதிக சத்ததுடன் இசை ஒலிக்கிறது.

குறிப்பாக நகரப்பகுதிகளில் ரெஸ்டோ பார்கள் அதிகளவு அதிகரித்துள்ளன. குடியிருப்புகளில் இருந்த ரெஸ்டாரண்ட்டுகள் பலவும் ரெஸ்டோ பார்களாக மாற்றப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். வெளிமாநில பயணிகளையும், இளையோரையும் குறிவைத்து புதுச்சேரியெங்கும் 350 ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டோ பார் அனுமதியை கலால்துறையும் நகராட்சியும்தான் தரவேண்டும். புதுச்சேரி மக்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் அதிக அளவு ரெஸ்டோ பார் திறக்க அனுமதி தந்துள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொந்தரவாக அமைந்துள்ளது.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், "ரெஸ்டோ பார்கள் தற்போது அதிகளவு அனுமதி தரப்பட்டுள்ளது. பல இடங்களில் மொட்டைமாடியிலோ, மேல்தளத்திலோ பார்களை வைத்து அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்க வைத்து நடனமாடி பார்ட்டி நடத்துகின்றனர். இதனால் அருகிலுள்ள குடியிருப்புவாசிகள், முதியோர் கடும் அவதிக்கு ஆளாகிறோம். நகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும், ஆளும் அரசும் இதை கண்டுகொள்வதே இல்லை.
மதுவுக்காக மட்டும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவதில்லை. அமைதியான சூழலுக்காகத்தான் வருகின்றனர். இனி குடும்பத்தினருடன் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இதுபோன்ற அரசு நடவடிக்கைகளால் குறையும்" என்கின்றனர்.

இதனிடையே, முத்தியால்பேட்டையில் புதிதாக திறந்த ரெஸ்டோ பார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் ரெஸ்டோ பார்கள் திறப்புக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து சிபிஎம் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ள 350 ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி தந்துள்ளதை எதிர்த்து கலால்துறையை முற்றுகையிட உள்ளோம். மக்கள் பாதிப்பு இதில் உச்சக்கட்டமாகியுள்ளது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x