Published : 28 Dec 2022 04:15 AM
Last Updated : 28 Dec 2022 04:15 AM
கோவை: திமுக மாநில கட்சி அல்ல, குடும்ப கட்சி என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து ஏராளமான திட்டங்கள் வருகின்றன. நம் நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. ஆனால், தமிழகம் பாதுகாப்பான கரங்களில் இல்லை. எனவே, அந்த கரத்தை மாற்றுவதே நல்லது.
திமுக என்பது மாநில கட்சி அல்ல. அது ஒரு குடும்ப கட்சி. வாரிசு கட்சி. மாநிலத்துக்கு ஏற்றதை செய்யும் கொள்கையுடன் அந்த கட்சி இல்லை. குடும்பத்துக்கு தேவையானதை செய்யவே உள்ளது. அதுவும்முதல் குடும்பத்துக்கு மட்டுமே. நாங்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் குடும்ப நலனில் அக்கறை கொண்டுள்ளனர். நாங்கள் அனைவரையும் ஒன்றிணைக்க இருக்கிறோம். அவர்கள் பிரிக்க இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல், அதைத்தொடர்ந்து நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, “தற்போதைய நீலகிரி எம்.பி. 2 ஜி வழக்கில் குற்றவாளியாக இருந்து ஊழலுக்கு பெயர் பெற்றவர். எப்போதாவது ஒருநாள் தொகுதியை எட்டிப்பார்க்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொங்கு பகுதி புறக்கணிப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 25 பேர் தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் முக்கியமானவர்கள் அமைச்சர்களாவர்” என்றார்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன், எம்எல்ஏ சரஸ்வதி, விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT