Published : 27 Dec 2022 05:12 AM
Last Updated : 27 Dec 2022 05:12 AM

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஜனவரி 9-ல் சட்டப்பேரவை கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கூறியதாவது: வரும் ஜன. 9-ம் தேதி காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அன்றே அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடைபெறும் என்பதை முடிவு செய்யும்.

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கடந்த பேரவைக் கூட்டத்தில் நான் குறிப்புரை அளித்தேன். அதன் பிறகு யாரும் கடிதம் தரவில்லை. எனவே, அந்தப் பிரச்சினை முடிந்து விட்டது.

பொதுமக்கள் பாதுகாப்புக்காக முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு சில வாரங்களுக்கு முன் முகக் கவசம் தேவையில்லை என்று கூறிவிட்டு, தற்போது முகக் கவசம் அணியுமாறு கூறுகிறது.சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் முகக் கவசம் அணிந்து வரலாம். எனினும், கரோனா பரிசோதனை தேவையில்லை.

இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். தற்போது கேள்வி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மற்ற நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப முயற்சித்து வருகிறோம்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறை அமைச்சருக்கு, பேரவையின் மரபுப்படி தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு இடையில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. பேரவையில் அவர்கள் ஆக்கப்பூர்வமாகத் தான் நடந்துள்ளனர். அரசியல், கட்சியின் ஸ்திரத்தன்மை, நோக்கம், கொள்கைகளை நிலைநிறுத்துவது போன்றவற்றுக்காக அவர்கள் சட்டப்பேரவையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். அதில் தவறேதும் இல்லை.

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் குறித்த சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்படாமல் இருந்தது. பின்னர், முதல்வர் தலைமையிலான அமைச்சரவை, ஆயுள் முடியும் வரை கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் இருக்கட்டும் என்று கூறி, அந்த மசோதாவை திரும்பப் பெற்றது.

ஓபிஎஸ், பழனிசாமி விவகாரத்தில் சட்டப்பேரவையில் குறிப்புரை அளிக்கப்பட்டது. அதை யாரும் எதிர்க்கவில்லை. அவர்கள் குறிப்புரையை ஏற்றுக் கொண்டனர். ஒரு கட்சியின் கொள்கை சார்ந்த பிரச்சினையை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராக அரசோ, சட்டப்பேரவையோ நடந்துகொள்வதில்லை. சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

4 நாட்கள் பேரவைக் கூட்டம்?: பேரவையில் ஆளுநர் உரையாற்றியதும், அந்த உரையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். தொடர்ந்து, அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். பெரும்பாலும் 4 நாட்கள், அதாவது ஜன. 12-ம் தேதி வரை பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் பொங்கல் விடுமுறை வருவதால், அதுவரை மட்டுமே கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட் டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x