Published : 26 Dec 2022 10:36 PM
Last Updated : 26 Dec 2022 10:36 PM

ஆதிதிராவிடர் நலத்துறையில் 20 நலத்திட்டங்கள் முடக்கம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளனர்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலம் முழுவதும் உள்ள, சமூகத்தில் பினதங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர், ஒவ்வொரு வருடமும், எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், பட்டப்படிப்பிற்காகவும், பட்ட மேற்படிப்பிற்காகவும், தலைநகர் சென்னைக்கு வருகிறார்கள். தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலை இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மாணவர்கள் விடுதிக்கூரை, மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும், சரியான குடிநீர் கிடைக்காமலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நெளிவதாகவும் விடுதி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த மழைக்காலத்தில், மழைநீர், விடுதியின் உள்ளே புகுந்ததால், மாணவர்கள் தூங்குவதற்கு இடமில்லாமலும், நோய்த் தொற்றுகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.

மேலும், ஆதிதிாரவிடர் நலத்துறையால், விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள் மாணவர்கள். இதுமட்டும் அல்லாது, மாணவர்களுக்கு மாதாமாதம் இதர செலவாக வழங்கவேண்டிய 150 ரூபாயும் வழங்கப்படவில்லை. இதுகுறித்தி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை என்று மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

மாணவர்கள் விடுதிகள் இத்தனை அலங்கோலமான நிலையில் இருக்க, அரசால் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தபடவில்லை என தெரியவந்துள்ளது. சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளனர்.

சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 757 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆதிதிராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திறனற்ற திமுக அரசு பதில் அளிக்க வேண்டும்.

கல்வி, வீட்டு வசதித்த திட்டங்கள், வேலைவாய்ப்பு, நூலகங்கள்,மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாய் பயன்படுத்தாமல் இருப்பது திறனற்ற திமுக அரசின் மெத்தனத்தையும், சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சியப் போக்கையும் காட்டுகிறது. ஆனால் அரசியல் மேடைகளில் சமுகநீதி நாடகம் அரங்கேற்றுவது திமுகவின் போலி வேஷத்தையே வெளிப்படுத்துகிறது.

எனவே, தமிழக அரசு, ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக மீண்டும் அத்துறைக்கு வழங்கி, மாணவர்களின் அடிப்படைத் தேவைகளையும், பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, நூலகம் உள்ளிட்ட இதர நலப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, தமிழக பாஜக சார்பாக இந்த அறிக்கையின் வற்புறுத்துகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x