Published : 27 Dec 2022 06:09 AM
Last Updated : 27 Dec 2022 06:09 AM

அரசியல் சார்புகளை கடந்து அனைவருடனும் நட்புறவு பாராட்டியவர் ராஜாஜி: ஸ்டாலின் புகழாரம்

மூதறிஞர் ராஜாஜியின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். உடன் , அமைச்சர்கள், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் இரா.செல்வ ராஜ் ஆகியோர்.

சென்னை: ‘‘அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும் நட்புறவைப் பேணியவர் மூதறிஞர் ராஜாஜி’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூதறிஞர் ராஜாஜியின் 50-வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். இந்நிலையில், ராஜாஜி குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், ஆட்சி நிர்வாகம், இலக்கியம் என பல தளங்களிலும் பங்களித்ததோடு, அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும் நட்புறவைப் பேணியவர் மூதறிஞர் ராஜாஜி.

அவரது வரலாற்றின் வழியே தமிழக அரசியலின் போக்கையும் திசைமாற்றத்தையும் அறிந்துகொள்ளலாம். விடுதலைப் போராட்டத்தில் ராஜாஜியின் பங்களிப்புக்காக இந்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை நேரில் சென்றுவழங்கியும், அவருக்கு கிண்டியில் நினைவாலயம் அமைத்தும் அவரைப் போற்றினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

தற்போது, ராஜாஜியின் 50-வது நினைவு ஆண்டையொட்டி அரசு விழா எடுத்தும், இன்றையதலைமுறையினரும் அவரது வரலாற்றையும் பங்களிப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி அமைத்தும் கருணாநிதியின் வழியில் மூதறிஞருக்கு மரியாதை செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x