Published : 26 Dec 2022 08:49 PM
Last Updated : 26 Dec 2022 08:49 PM

கரோனா அலர்ட் | துல்லியத் தகவல்களை மட்டுமே மக்களிடம் பகிர வல்லுநர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

கோப்புப்படம்

புதுடெல்லி: கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று பொதுநல மருத்துவ வல்லுநர்களிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். கரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர், இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். கரோனா சிகிச்சையின் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

ஊகத்தின் அடிப்படையிலான தகவல்களை பகிர வேண்டாம் என்றும், துல்லியமான தகவல்களை மட்டும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார். உலகளவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்கும் வகையில் சரியான தகவல்கள் பகிரப்படுவது நமது பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

கரோனா சிகிச்சை தொடர்பான நாடு தழுவிய அளவிலான செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஒத்திகை குறித்து கருத்து தெரிவித்த மன்சுக் மாண்டவியா, முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் ஒருபகுதியாகவே இந்த ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் மற்றும் வல்லுநர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x