Published : 26 Dec 2022 07:16 AM
Last Updated : 26 Dec 2022 07:16 AM

இந்து சமய அறநிலையத்துறை நிலம் குத்தகை காலம் 5 ஆண்டுகளாக உயர்வு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் நிலத்துக்கான குத்தகைக்காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டு களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத் துறையின் அசையா சொத்துகளின் குத்தகை உரிமம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் கோயில் நிர்வாகிகளால் பொது ஏலம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டால் மட்டுமே குத்தகை சொத்தை முழுமையாக குத்தகைதாரரால் பயன்படுத்த இயலும் என்ற கோரிக்கை வரப்பெறுகிறது.

மேலும், 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்தை காலி செய்து சுவாதீனம் பெற்று பொது ஏலம் மூலம் நிர்வாகத்தால் மீண்டும் குத்தகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதனை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சொத்தை சுவாதீனம் பெற இயலாத நிலை ஏற்படுகிறது.

கட்டமைப்பு வசதிகள்: எனவே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துகளை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பொது ஏலம் மூலம் வழங்கினால் மட்டுமே, குத்தகைதாரர் அவரது பயன்பாட்டிற்கேற்ப, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு சொத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், சொத்தை மேம்படுத்துவதற்காக குத்தகைதாரர்களால் செலவிடப்படும் தொகை அறநிலையத்துறையால் திரும்ப வழங்க இயலாது என்பதால், கட்டுமானப் பணிகளுக்காக அவர்களால் முதலீடு செய்யப்பட்ட தொகையை திரும்ப பெறும் கால அளவுக்கேற்ப குத்தகை காலம் இருக்க வேண்டும்.

பொது ஏலம் மூலம் குத்தகை: அதே நேரத்தில் சொத்தில் இருந்து அறநிறுவனங்களுக்கு வர வேண்டிய வருவாய் முழுமையாக வருவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, அறநிறுவனங்கள் நன்மை கருதியும், குத்தகைதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்தும் அறநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை மேலும் 2 ஆண்டுகள் அதிகரித்து 5 ஆண்டுகளுக்கு பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x