Published : 26 Dec 2022 04:23 AM
Last Updated : 26 Dec 2022 04:23 AM

அரசு உத்தரவையும் மீறி அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளி நிர்வாகங்கள்

பிரதிநிதித்துவப் படம்

திருச்சி: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கடந்த டிச.16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெற்றது.

இதில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் விடைத்தாள்களை விரைவாக திருத்தி வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிவடைந்ததை அடுத்து, மாணவர்களுக்கு டிச.24 முதல் ஜன 1-ம் தேதிவரை தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை மட்டும் வழங்கலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறைசுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் வகையில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம்வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இன்று(டிச.26) முதல் டிச.30-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

இதில், அனைத்து மாணவர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டிப்புடன் வாய்மொழியாக பள்ளி நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். அரசு, பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய முரண்பட்ட அறிவிப்பால் மாணவ, மாணவிகள் குழப்பத்துக்குள்ளாகி உள்ளனர். பொதுத்தேர்வு போன்றே அரையாண்டு தேர்வு நடத்தப்பட்ட பிறகும்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘பொதுவாக தேர்வு விடுமுறைகாலங்களில் குறிப்பிட்ட பாடத்தைகற்பதில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் கற்றல்வளர்ச்சிக்காக சில மாணவர்களுக்கு மட்டுமே பல ஆண்டுகளாகவே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தான், இந்த கல்வியாண்டிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறையில் இருந்து எங்களுக்கு எந்த சுற்றறிக்கையோ, வாய்மொழி உத்தரவோ வரவில்லை. ஆகையால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக5 நாட்களுக்கான பாடப்பிரிவு அட்டவணைகள் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது’’ என்றனர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரையாண்டு தேர்வு முடிவுற்ற பிறகு டிச.24-ம் தேதி முதல்ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுறைஅறிவிக்கப்பட்டு, இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மற்றும் பிற தொடர் சாதனங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x