Last Updated : 23 Dec, 2022 11:43 PM

 

Published : 23 Dec 2022 11:43 PM
Last Updated : 23 Dec 2022 11:43 PM

மாநகராட்சி, நகராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் எல்இடி விளக்குகள்? - அரசிடம் புதிதாக மனு அளிக்க உத்தரவு

மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் திட்டத்தை நமக்கு நாமே திட்டத்தில் செயல்படுத்தக்கோரி அரசிடம் புதிதாக மனு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சங்கரபாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் 11 மாநகராட்சிகள், 87 நகராட்சிகளில் தற்போதுள்ள 3,00,796 தெரு விளக்குகளை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக எல்இடி விளக்குகள் பொருத்த நகர்ப்புற வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.342.85 கோடி கடன் வாங்குமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 14.10.2022-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த கடனை 6 ஆண்டில் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். இந்த அரசாணைப்படி ஒரு உள்ளாட்சி அமைப்பு ரூ.2 கோடி கடன் வாங்கினால், ரூ.2.70 கோடி திரும்ப செலுத்த வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சிகளின் மின் கட்டணத்தை குறைக்கும் நோக்கத்தில் தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படுகிறது. இதனால் 40 சதவீத மின் தேவை குறைந்து, ரூ.65 கோடி மின் கட்டணம் சேமிக்கப்படும் என அரசு கூறியுள்ளது. அதேநேரத்தில் வங்கியில் கடன் வாங்கி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் 50 சதவீத பங்களிப்புடன் நிறைவேற்றினால் மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிச்சுமை 50 சதவீதம் குறையும்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் தயாராக உள்ளனர். எல்இடி விளக்குகள் பொறுத்த வங்கியில் கடன் வாங்கக்கோரும் அரசாணையை ரத்து செய்து, நமக்கு நாமே திட்டத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் திருத்திய அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டம். அதுவரை அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்." என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராஜா கார்த்திக்கேயன் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், "உள்ளாட்சி அமைப்பின் கடன் சுமை, வட்டி சுமை குறையும் என்பதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசின் நிர்வாக நடைமுறையில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே மனுதாரர் கோரிக்கை தொடர்பாக புதிய மனு அளிக்கலாம். அப்படி மனு அளிக்கும் நிலையில் நீதிமன்ற கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x