Published : 09 Dec 2022 06:35 AM
Last Updated : 09 Dec 2022 06:35 AM
சென்னை: கட்சிக்காக உழைக்க தயாராக இல்லாதவர்கள் உடனே கட்சியை விட்டு வெளியேறலாம் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் ஓழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ் விநாயகம், மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, கரு நாகராஜன், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், மீனவர் அணி மாநிலத் தலைவர் சதீஷ்குமார், தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் தலைவர் தினா மற்றும் கராத்தே தியாகராஜன், சசிகலா புஷ்பா, மாநில செயலாளர்கள், மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் வெற்றி வியூகம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து, அதனை வலுப்படுத்த வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார்.
அதேபோல், கட்சியிலிருந்து சிலரை தற்காலிகமாக நீக்கியது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, கட்சிக்கு யாரேனும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்காக உழைக்க தயாராக இல்லாதவர்கள் உடனே கட்சியை விட்டு வெளியேறலாம் எனவும் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில், கடந்த முறையைவிட தற்போது கூடுதல் இடங்களை கேட்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், எனவே, மக்களவை தேர்தலில், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும், அந்தந்த தொகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பாஜகவில் முன்னாள் எம்எல்ஏ: ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நிலக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ க.அன்பழகன், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT