Published : 06 Dec 2016 02:07 AM
Last Updated : 06 Dec 2016 02:07 AM

பதிவுகள்: ஜெயலலிதாவுக்கு பிரியாவிடை தரும் தமிழகம்

>>> 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

>>> முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் உடல் தங்கப்பேழையில் வைக்கப்பட்டு பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டது. தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மூலம் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.

ஜெயலலிதா உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டதும், முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சசிகலா, நடராஜன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரது தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் இறுதிச் சடங்குகளை செய்தனர். 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

>>> மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

>>> மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

>>> மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

>>> மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

>>> ஜெயலலிதா உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

>>> ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா அஞ்சலி செலுத்தினார்.

>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமான், "ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்துக்கும், பாரத தேசத்துக்கும் பேரிழப்பு" என்றார்.

>>> ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் பிரதமர் தேவே கவுடா அஞ்சலி செலுத்தினார்.

>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். "ஜெயலலிதா துணிச்சலானவர். ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். அரசியலில் அவர் ஏற்படுத்திய வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாது" என்றார்.

>>> ஜெயலலிதா உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார். சந்திரபாபு நாயுடு பேசும்போது, "ஜெயலலிதாவின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பாணியில் ஆந்திராவிலும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.

ராஜாஜி அரங்கில் அலையெனத் திரண்ட மக்கள் | படம்: ம.பிரபு

>>> மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

>>> ஜெயலலிதாவின் உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

>>> ஜெயலலிதாவின் உடலுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அஞ்சலி செலுத்தினார்.

>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அஞ்சலி செலுத்தினார். துணிச்சலான முடிவுகளை எடுப்பவர் ஜெயலலிதா என புகழஞ்சலி செலுத்தினார்.

>>> மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், "ஏழை மக்களின் நலனுக்கு பாடுபட்டவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு" என்றார்.

(முதல்வர் ஜெயலல்தாவுக்கு அஞ்சலி செலுத்திய மோடி | படம்: ம.பிரபு)

>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

>>> தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும் ஆறுதல் கூறினார்.

>>> ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

>>> ஜெயலலிதாவின் உடலுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.

>>> குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். ஏற்கெனவே அவர் புறப்பட்ட விமானம் கோளாறு காரணமாக டெல்லி திருப்பப்பட்டது. தற்போது அவர் வேறு விமானம் மூலம் சென்னை வருகிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் முதல்வர் நாராயணசாமி.

>>> முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து புறப்பட்டார். கடற்படைத் தளத்துக்குச் சென்று அங்கிருந்து காரில் ராஜாஜி மைதானத்துக்கு செல்கிறார்.

>>> நடிகர் ரஜினிகாந்த அவரது மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோருடன் வந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியுடன் அவரது மூத்த மருமகன் தனுஷும் வந்திருந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நடிகர் ரஜினிகாந்த் | படம்: ம.பிரபு.

>>> ஜெயலலிதாவின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இரங்கல் தெரிவித்து இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

>>> தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த். | படம்: ம.பிரபு.



>>> முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அஞ்சலி | படம்: ம.பிரபு

ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

>>> ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை புறப்பட்டார்.

படம்: எல்.சீனிவாசன்.

>>> தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். | பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.

>>> ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். தொண்டர்கள் பலரும் கதறி அழுதபடி தங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர். மக்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,

>>> ஜெயலலிதா மறைவையொட்டி, மத்திய அரசு இன்று ஒருநாள் தேச அளவில் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

>>> தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.

> நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினர். அப்போது கதறி அழுத சசிகலாவின் கை பிடித்து பிரபு ஆறுதல் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் கடல் ஆக மாறும் அண்ணா சாலை. | படம்: எல்.சீனிவாசன்

>>> ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.

>>> ஜெயலலிதா உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

>>> பாஜக முத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

>>> ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள், வெள்ளம் போல் திரண்டுள்ளனர். அண்ணாசாலையில் சாரைசாரையாக அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

>>> காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார்.

>>> ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அவரது உடல் அருகிலேயே ஒரு நாற்காலி இட்டு அமர்ந்தார்.

படம்: ம.பிரபு

>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

>>> முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்துவிட்டு, காலைத் தொட்டபடி அழுதுகொண்டே அஞ்சலி செலுத்தினார்.

>>> சென்னை - ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் நின்றிருந்தனர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்று காத்துக்கொண்டிருக்கின்றனர். போலீஸார் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

>>> ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

>>> மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படவுள்ளது. இதையொட்டி, அப்பகுதியில் காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

>>> போயஸ் தோட்ட இல்லப் பகுதியில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள் மீளாத் துயரத்துடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.

>>> தொண்டர்கள் குவிந்திருந்த போயஸ் தோட்டம் பகுதியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே மாலை 4 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.