Published : 26 Nov 2022 06:19 AM
Last Updated : 26 Nov 2022 06:19 AM

7.5% உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள்: 582 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு ஒதுக்கீட்டுக்கான அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களும் நிரம்பியுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. நேரடியாக நடந்த மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 65 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் 565 இடங்களும் நிரப்பப்பட்டன.

பொது கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 இடங்களும் நிரம்பின. முதல் சுற்றுக் கலந்தாய்வில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எஸ்.டி. பிரிவினருக்கான ஒரு எம்பிபிஎஸ் இடம், 3 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்பிசி பிரிவில் 43 பிடிஎஸ் இடங்கள் மற்றும் இடஒதுக்கீட்டு ஆணை பெற்று கல்லூரிகளில் சேராத மாணவர்கள் என மொத்தம் 1,700 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன.

இதையடுத்து, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக கடந்த 17-ம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு கட்டகலந்தாய்வில் 7,430 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் 582 அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவில் (என்ஆர்ஐ) 126 பேர் இடஒதுக்கீடு பெற்றுள்ளனர். இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் https://tnmedicalselection.net என்ற தமிழக சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளும் இரண்டு கட்ட கலந்தாய்வில் நிரம்பிவிட்டன.

முதல்கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் வரும் 29-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் இறுதிக்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x