Published : 20 Nov 2022 06:01 AM
Last Updated : 20 Nov 2022 06:01 AM

மாணவர்களை எதிர்கால சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்: முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் வேண்டுகோள்

 சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியின் 50-வது ஆண்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்டி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ‘ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி; 50 ஆண்டுகள் சிறந்த கல்விச் சேவை’ என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் வெளியிட, ‘இந்து’ என்.ரவி பெற்றுக் கொண்டார். அருகே இந்தியன் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் விஜய் சங்கர், வைத்தியநாதன், வி.ராம், லட்சுமி விஜயகுமார், மதுரா விஸ்வேஸ்ரன், நிர்வாக அறங்காவலர் என்.குமார், பள்ளியின் முதல்வர் மிட்டா வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: எதிர்கால சூழலுக்கேற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்று மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.

இந்தியன் கல்வி அறக்கட்டளையின்கீழ் சென்னை அடையாறில் இயங்கிவரும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை முன்னிட்டு 50-வது ஆண்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்டி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ‘ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி; 50 ஆண்டுகள் சிறந்த கல்விச் சேவை’ என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன் வெளியிட, ‘இந்து' என்.ரவி பெற்றுக் கொண்டார்.

விழாவில் எம்.கே.நாராயணன் பேசியதாவது: கடந்த 50 ஆண்டுகளில் இந்த பள்ளி கல்வியில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் சிறப்பானவைகளாகும்.

தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இங்குள்ள அனுபவங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கல்லூரிகளுக்கு சென்றபிறகு அதிக சுதந்திரத்துடன் நீங்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால், பள்ளியில் கற்றுக்கொள்பவைகள்தான் நமக்கு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வழிசெய்யும். எனவே, இந்த பள்ளிக் காலத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களின் மதிப்பை பெரும்பாலானவர்கள் சரியாக உணர்வதில்லை. கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு ஆசிரியர்கள் திறம்பட செயலாற்றுகின்றனர். ஒவ்வொரு குழந்தையின் மனதை நெறிப்படுத்தி சிந்திக்க கற்று தருவதும் ஆசிரியர்கள்தான். மேலும், மாணவர்களை சரியான முறையில் ஊக்குவித்து சாதனை புரிவதற்கு அவர்களே உதவி செய்கின்றனர். தற்போது தொழில்நுட்பம் பெரியளவில் வளர்ந்துவிட்டாலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியமானது.

முந்தைய காலத்தைவிட தற்போது ஆசிரியப் பணியில் இருப்பவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் கூடுதலாக உள்ளன. தற்போது உலகம் வேகமாக முன்னேறிகொண்டிருக்கிறது. அதற்கு ஏதுவாக மாணவர்களை தயார்படுத்தி எதிர்காலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. மேலும், மாணவர்களின் சூழல் மற்றும் தேவைகளை அறிந்து அவர்களை முன்னேற்றிட கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ‘இந்து' என்.ரவி பேசியதாவது: சென்னையின் மிகச் சிறந்த பள்ளியாக இந்த கல்வி நிறுவனம் விளங்குவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில், இந்த பள்ளியில் சிறப்பான ஆசிரியர்கள் மூலம் தலைமைப் பண்பை பெறும் மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். இங்கு பயிற்றுவிக்கும் முறை சிறப்பாக இருப்பதால் தொடர்ந்து பல ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை வழங்கி வருகிறது. கல்வியோடு கலாச்சாரத்தையும் ஒருசேர மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் மீது ஆசிரியர்கள் சிறந்த முறையில் கவனம் செலுத்துகின்றனர். சில பள்ளிகள் ஒழுக்கத்தை போதிக்க கடுமையான வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. ஆனால் இந்த பள்ளியோ மென்மையான எளிய முறையில் பயிற்றுவிப்பதால் மாணவர்களே விரும்பி பள்ளிக்கு வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இந்த பள்ளி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. வரும் நாட்களில் அது தொடரவும், வளம்பெறவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்தியன் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் விஜய் சங்கர், வைத்தியநாதன், வி.ஸ்ரீராம்,லட்சுமி விஜயகுமார், நிர்வாக அறங்காவலர் என்.குமார்,  சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் மிட்டா வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x