Last Updated : 03 Nov, 2016 12:40 PM

 

Published : 03 Nov 2016 12:40 PM
Last Updated : 03 Nov 2016 12:40 PM

பயணிகளை சோதிக்கும் சிங்காநல்லூர் புதிய ரயில்வே பாலம்: இருளில் தடுமாறும் வாகன ஓட்டிகள்; விபத்து அதிகரிக்கும் அபாயம்

கோவை சிங்காநல்லூர் - வெள்ளலூர் இடையே கட்டப்பட்டு மக்களால் திறக்கப்பட்ட புதிய ரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகள் அரைகுறையாய் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் தினமும் ஒரு விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அதிக போக்குவரத்து உள்ள பகுதி சிங்காநல்லூர். போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட தெற்குப் பகுதி ஊர்களை இணைக்க சிங்காநல்லூர் - வெள்ளலூர் இடையே புறவழிச்சாலை உள்ளது. சிங்காநல்லூர் அருகே இந்த சாலையின் நடுவே ரயில் பாதை குறுக்கிடுகிறது. அதிக போக்குவரத்துள்ள சாலை என்பதால், இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை நிலவி வந்தது. 2007-08-ம் ஆண்டு ரயில்வே திட்டத்தில் மேம்பாலம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ரூ.25.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 876 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்தில் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே நிர்வாகம் இணைந்து இந்த பாலத்தை கட்டி முடித்துள்ளன. இடையே நில ஆர்ஜிதம், நிதி ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளால் கட்டுமானப் பணி மிகவும் தாமதமாகி வந்தது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் பணிகள் முடிந்தன. ஆனால் பாலம் திறக்கப்படவில்லை. பொறுமையிழந்த மக்கள், தாங்களாகவே பாலத்தை பயன்படுத்தத் தொடங்கினர். அதன் பிறகு அதிகாரிகள் முறைப்படி பாலத்தை திறந்துவைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். இதனால் நீண்டகாலமாக நிலவிய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்தது.

திடீர் பள்ளம்

ஆனால், தற்போது இந்த பாலத்தின் தரம், புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வெள்ளலூர் மார்க்கத்தில் இருந்து வரும்போது, பாலம் தொடங்கும் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாலை திடீரென உள்வாங்கியது. இதனால் பாலம் தொடங்குமிடத்திலேயே ஆபத்து காத்திருக்கிறது. சரிவான இடத்தில் பள்ளம் இருப்பதால், இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

வெள்ளலூரைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் கூறும்போது, ‘புதிய பாலம் திறந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக, பள்ளம் ஏற்பட்டுவிட்டது. நானே இரண்டு முறை இங்கு விபத்தில் சிக்கி, மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன். சமதளத்தில் பள்ளம் இருந்தால் கூட ஏதாவதொரு வகையில் தப்பித்துவிடலாம். சரிவான பகுதி என்பதால் வேகமாக வரும் வாகனங்கள் நிச்சயம் விபத்தில் சிக்கும்’ என்றார்.

இதேபோல பாலத்தின் மொத்த நீளத்துக்கும் (ரயில்வே கடவுப் பகுதி தவிர) இருபுறமும் விபத்துகளைத் தடுப்பதற்காக தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை விபத்தை தடுப்பதற்கு பதில், பெரிய அளவில் விபத்துகளை ஏற்படுத்தக் காத்துள்ளன. சரியாக வெல்டிங் வைக்கப்படாதால், தடுப்புக் கம்பிகள் அனைத்துமே வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. வாகன ஓட்டிகளோ, வாகனத்தில் செல்வோரின் உடைகளோ அந்த கம்பிகளில் சிக்கினால் நிச்சயம் அசம்பாவிதங்கள் ஏற்படும். விபத்துகளைத் தவிர்க்க பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே இங்குள்ள மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பாலத்துக்காக அமைக்கப்பட்ட அணுகுசாலையில் தான் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல இருபுறமுள்ள தடுப்புக் கம்புகளையும் சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.

தெரு விளக்கே இல்லாத பாலம்

ரூ.25 கோடியில் பாலம் கட்டப்பட்டாலும், இதுவரை ஒரு தெரு விளக்கு கூட அமைக்கப்படவில்லை. பாலத்தில் மட்டுமல்லாமல், பாலத்தை ஒட்டிய அணுகுசாலை, சாலை என அப்பகுதியிலேயே தெரு விளக்குகள் இல்லை. இங்கு பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில், தெரு விளக்குகளும் இல்லாதது இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை மேலும் அச்சுறுத்துகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ‘பாலத்தில் விளக்குகள் அமைப்பதற்காக பொதுப்பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பணிகளைத் தாமதப்படுத்தி வருகின்றனர். விரைவில் பணிகள் தொடங்கும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x