Published : 01 Nov 2022 06:22 PM
Last Updated : 01 Nov 2022 06:22 PM

தமிழகத்தில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | கவனிக்கத்தக்க 10 தகவல்கள்

சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு: சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். அதேபோல், சென்னை மாநகராட்சியில் உள்ள வெள்ளத்தடுப்பு கட்டுப்பாட்டு அறையை 044-25619206, 044-25619207 மற்றும் 044-25619208 என்ற தொலைபேசி வழியாகவும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதுதவிர சென்னை மாநகராட்சியின் "நம்ம சென்னை செயலி" மற்றும் மாநகராட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் பரவலாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > வானிலை முன்னெச்சரிக்கை | தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை; சென்னையில் 24 மணி நேரம் மிக கனமழை வாய்ப்பு

கனமழை பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். “சிறு தவறு என்றாலும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதையும், சிறு உதவி என்றாலும், அது பெரிய நல்ல பெயரையும் ஏற்படுத்தும் என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். | விரிவாக வாசிக்க > மழை நிவாரணப் பணிகள் | “சிறு தவறு நடந்தாலும் பெரிய கெட்ட பெயர்” - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

முன்னெச்சரிக்கைப் பணிகளில் 2000 களப்பணியாளர்கள்: கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2000 களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. விரிவாக வாசிக்க > வடகிழக்குப் பருவமழை | முன்னெச்சரிக்கைப் பணிகளில் 2000 களப்பணியாளர்கள்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

“சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை” - சென்னையில் புதிதாக தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர். முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் வடிகால் பணிகள் நடைபெற்றதால் இந்த ஆண்டு மழைநீர் அதிகம் தேங்கவில்லை என்றும், மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் மோட்டார்கள் கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். விரிவாக வாசிக்க > “சென்னையில் புதிதாக தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை” - அமைச்சர்கள் தகவல்

சென்னையின் பல பகுதிகளில் கனமழை பதிவு: சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதியில் 12 செ.மீ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 10 செ.மீ, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை பகுதியில் 9.8 செ.மீ, அயனாவரம் பகுதியில் 9.4 செ.மீ, நுங்கம்பாக்கம் பகுதியில் 8 செ.மீ கனமழை பதிவாகியிருந்தது. விரிவாக வாசிக்க > 72 ஆண்டுகளில் சென்னையில் 3வது முறை... பெரம்பூரில் 12 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவு

தமிழகத்தில் பரவலாக கனமழை நீடிப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக மண்டபம், தக்கலை, இரணியல், வேதாரண்யம் , நாகப்பட்டினம், பெருஞ்சாணி அணை , குளச்சல், சூரளக்கோடு ஆகிய இடங்களில் கன மழை பெய்துள்ளது.

1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார்: அமைச்சர் செந்தில்பாலாஜி: "வடகிழக்குப் பருவமழைக்காக மின்வாரியத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைமையகத்தில் ஆய்வு செய்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் அவர்கள் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை கனமழை: 2 பேர் உயிரிழப்பு: சென்னை கனமழைக்கு திங்கள்கிழமை 2 பேர் பலியாகினர். புளியந்தோப்பில் வீட்டின் மேற் கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x