Published : 01 Nov 2022 04:46 PM
Last Updated : 01 Nov 2022 04:46 PM

மதுரை | நூற்றாண்டுக்கு முன்பு 13 கி.மீ-க்கு சாலை... குன்றக்குடி ஆதீன சாதனை சொல்லும் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் குன்றக்குடி ஆதீனம் மக்கள் பயன்பாட்டுக்காக 125 ஆண்டுக்கு முன்பு 13 கிமீ தூரத்துக்கு சாலை அமைத்துக் கொடுத்ததை குறிக்கும் கல்வெட்டு.

மதுரை: சைவ சமயத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட குன்றக்குடி ஆதீனம், மக்கள் பயன்பாட்டுக்கு 123 ஆண்டுக்கு முன் 13 கி.மீ தூரத்துக்கு சாலை அமைத்து கொடுத்ததை குறிப்பிடும் கல்வெட்டு கொட்டாம்பட்டி அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், மந்தைத்திடல் அருகில் சாய்ந்த நிலையில் கிடந்த ஆறடி உயர கல் தூண் கல்வெட்டை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் வே.சிவரஞ்சனி, மாணவர்கள் ரா.கோகிலா, து.மனோஜ், வி.டோனிகா, மு.பிரவீணா ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இக்கல்வெட்டில் மொத்தம் 19 வரிகள் உள்ளன. கல்வெட்டின் கீழே பெரிய மீன் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: ''இந்த கல்வெட்டு கிபி 1899-ம் ஆண்டைச் சே்ர்ந்தது. இதில் 'விளம்பி வருடம் தை மாதம் 3-ம் நாள் லெட்சுமி தாண்டவபுரத்திலிருந்து பிரான்மலை வாருப்பட்டி வரையில் திருவண்ணாமலை ஆதீனம் தாண்டவராய தேசிகரால் புதிதாக போடப்பட்ட வயிரவன் சாலை' என குறிப்பிட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முக்கியமான சில சாலைகளில் மட்டுமே சரளைக்கல் போடப்பட்டிருந்தது. குதிரை, மாட்டு வண்டிகள் செல்லும் மற்ற சாலைகள் மழைக்காலங்களில் பயன்படாமல் இருந்தன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 40-வது மடாதிபதியாக கி.பி.1893 முதல் 1902 வரை இருந்த தாண்டவராய தேசிக சுவாமிகள், மக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக இச்சாலையை அமைத்து கொடுத்துள்ளார். இது வயிரவன் சாலை என அழைக்கப்பட்டுள்ளது.

சைவ சமய சித்தாந்தத்தை வளர்க்க கி.பி.16-ம் நூற்றாண்டு முதல் பல சைவ ஆதீன மடங்கள் தோன்றி பெரும் பங்காற்றியுள்ளன. சைவ மட ஆதீனம் மக்கள் நலனை முன்னிறுத்தி சாலை அமைத்து கொடுத்து உதவியதை அறிய முடிகிறது. பள்ளபட்டி எனும் ஊர் பெயர் கல்வெட்டில் 'லெட்சுமி தாண்டவபுரம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x