

மதுரை: தமிழகத்தில் இயற்கை புகையிலை விற்பனைக்கான தடை நீக்கிய உயர் நீதிமன்றம், இயற்கை புகையிலையை வெல்ல நீர் தெளித்து வேதிப்பொருள் சேர்க்காமல் விற்கலாம் என யோசனை கூறியுள்ளது.
இது தொடர்பாக இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பான் பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி இயற்கையாக விளைவிக்கப்பட்ட புகையிலையை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை புகையிலை விற்பனைக்கான தடையை நீக்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''இயற்கையாக விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்க தடையில்லை. விவசாயிகளிடம் புகையிலையை வாங்கி அதில் வெல்லம் கலந்த நீரை தெளித்து வேதிப் பொருள் எதையும் சேர்க்காமல் விற்கலாம். இயற்கை புகையிலையிலும் நிகோடின் என்ற வேதிப்பொருள் இருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழக அரசு வேடசந்தூர் பகுதியில் இயற்கை புகையிலை வேளாண் மையம் அமைத்து விவசாயம் செய்து வருகிறது. தமிழக அரசும் இயற்கை புகையிலை விவசாயத்திற்கு தடை விதிக்கவில்லை. இவ்வாறு இருக்கும் போது இயற்கை புகையிலைக்கு எவ்வாறு தடை விதிக்க முடியும். இதனால் இயற்கையாக விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட புகையிலையைப் பயன்படுத்தலாம். இயற்கை புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.'' இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளனர்.