Published : 28 Oct 2022 07:03 AM
Last Updated : 28 Oct 2022 07:03 AM
சென்னை: சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சிபிரிவு மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சுதந்திர இந்தியாவில் சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளை இடம்பெறச் செய்தவர் அண்ணல் அம்பேத்கர். அவரது திருவுருவ சிலையை முதல்வர் திறந்து வைத்திருப்பது மிகவும் பொருத்தமாகும். தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் தலைதூக்கி, தீவிரவாத செயல்கள் நடைபெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்ற சூழலில் அதை ஒடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக முதல்வருக்கு இருக்கிறது.
அத்தகைய வகுப்புவாத சித்தாந்தங்களை முறியடிப்பது அம்பேத்கரின் புகழைப் பரப்புவதன் மூலமே முடியும். அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்ததற்காக தமிழக தலித் மக்களின் சார்பாக முதல்வரை போற்றுகிறேன். அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலை அமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும் மனதாரப் பாராட்டுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT