Last Updated : 21 Oct, 2022 11:11 PM

 

Published : 21 Oct 2022 11:11 PM
Last Updated : 21 Oct 2022 11:11 PM

காரைக்கால் மீனவர்கள் கைது | வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறேன் - ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் - இடையார்பாளையம் பகுதியில் ஆலுத்தவேலி அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். அங்குள்ள தொழிலாளர்களிடம் பட்டாசு செய்யும் முறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது: ‘‘சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. புதுச்சேரியிலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இங்கு இதற்கு முன்பு ஆறு அல்லது ஏழு பட்டாசு தொழிற்சாலைகள் இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி அவை மூடப்பட்டுவிட்டது. ஒன்று மட்டுமே இயங்குகிறது என்று கேள்விப்பட்டேன். பாதுகாப்புடன் இதை விரிபடுத்த முடியுமா. அடுத்த தீபாவளிக்குள் அதனை செய்ய முடியுமா என்பதை அறிந்து கொள்ளவும், தொழிலாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் வந்தேன். அவர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

கை தொழில்களும், சிறு தொழில்களும் புதுச்சேரியில் எல்லா விதத்திலும் வளர வேண்டும். பட்டாசு தொழில் நல்ல தொழில். எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளை கொடுக்கிறது. அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல் பாதுகாப்போடு எப்படி தயாரிப்பது, வேலை செய்பவர்களுக்கு ஆயுள் காப்பீடு இருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்த வேண்டும். பொதுமக்களும் தீபாவளி பண்டிகையை மிக எச்சரிக்கையாக கொண்டாட வேண்டும். மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவு தயாராகவே இருக்கிறது. ஆனாலும் யாருக்கும் தீக்காயம் படக்கூடாது. மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பக்கத்தில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

தூரத்தில் இருந்துதான் வெடிக்க வேண்டும். ஆஸ்துமா போன்ற நோயாளிகள் புகைக்குள் போகக்கூடாது. மக்கள் எச்சரிக்கையாக அதே நேரத்தில் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து இந்த தொழில் சிவகாசி போல நல்ல நிலையில் பல்கி பெருகுவதற்கு, பலருக்கும் வேலை வாய்ப்புகளைக் கொடுப்பதற்கு என்ன முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்போம். காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி வெளியேறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறேன். எப்போதெல்லாம் நாம் கோரிக்கை வைக்கிறோமோ அப்போதெல்லாம் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள். அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மத்திய அரசு குறிப்பாக புதுச்சேரி அரசும் உடனிருக்கும். இதற்கு முன்பும் காரைக்கால் மீனவர்களுக்கு பிரச்சனை வந்தபோது நாம் முன்நின்று அவர்களை மீட்டிருக்கிறோம். அவர்கள் எந்த விதத்திலும் பாதிப்பு அடையக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மத்திய அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x